முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.05.2023) சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யை தொடங்கி வைத்து, முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023க்கான “வீரன்” சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், “முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023-க்கான இலச்சினையை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யின் இலச்சினை மற்றும் வலைதளத்தை  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. மகேந்திர சிங் தோனி அவர்களும்வெளியிட்டார்கள்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்  
பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு  மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக்கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” (Tamil Nadu Champions Foundation) என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யை
தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யின் இலச்சினை மற்றும் வலைதளத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. மகேந்திர சிங் தோனி அவர்கள் வெளியிட்டார்.

விளையாட்டுத்துறை சிறப்பாக இயங்க நிதி ஆதாரம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். எனவே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் குழுவின் செயல்பாடுகள்ஆகியவை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு உயர் அலுவலர்களை இயக்குநர்களாக கொண்டதாகும். இந்த அறக்கட்டளையானது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 12AA மற்றும் 80G இன் கீழ் வரி விலக்கு சான்று பெற்றுள்ளது.

நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை மதிப்பாய்வு செய்திடவும், நன்கொடையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் முழுமையான நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை  உருவாக்கும் வகையிலும் இந்த அறக்கட்டளை செயல்படும். இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகளுடன்  12 விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும்என்ற  அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற 14.12.2022 அன்றே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டும் 10 விளையாட்டுகளில் நடத்தப்பட்ட மாநில போட்டிகளில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய 5 பிரிவுகளில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திடவும், இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகள் உட்பட 15 விளையாட்டுப் போட்டிகள் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களையும் இணைத்து நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளை நடத்துவதற்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர்நல ஒருங்கிணைப்புக் குழுவும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர்நல அலுவலரை ஒருங்கிணைப்பாளாராக கொண்ட  மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும், இப்போட்டிகளை சிறப்பாக நடத்திடஅமைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023-க்கான வீரன்” சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான இலச்சினையை வெளியிட்டார்.

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 38 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,71,351பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரைநடைபெற்றது.

அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெறும் / தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் / வீரர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் முடிவுற்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வருவதால் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் 2023 மே மாதம் இரண்டாவது வாரத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விழாக்களில் வழங்கப்படும்.

மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கங்களின் வசதிகளை பயன்படுத்தி 2023 ஜுன் மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இம்மாபெரும் போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து
27,000-க்கும் மேற்பட்ட முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநில அளவிலான போட்டியில், பதக்க நிலைக்கு ஏற்ப அதிக புள்ளிகள் பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்திட தமிழ்நாடு அரசால்50.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.எம்.கே. மோகன்
, திரு. த. வேலு, திரு. இரா. மூர்த்தி, திரு.டி.ஆர்.பி. ராஜா, திரு. இ. பரந்தாமன், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ..ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, ..., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு.ஜெ. மேகநாத ரெட்டி, ..., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.