இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் நாம் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம்.
திருச்சியை ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாடி வீடு’ என்று பேரறிஞர் அண்ணாவும், ‘கழகத்தின் கோட்டை’ என்று நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் சொல்வார்கள். கழகத்தின் கோட்டை மட்டுமல்ல, கழகத்தின் தீரர்கள் கோட்டம்தான் இந்த திருச்சி.
1971-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய கொள்கை முழக்கங்களான,
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்,
* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,
* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்,
* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,
* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’- என்ற ‘ஐம்பெரும் முழக்கங்களை’ நமக்கு உருவாக்கித் தந்தார்கள்.
முக்கியமான மாநாடுகளை திருச்சியில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து நடத்துவார்கள். அவ்வாறு நடத்தப்படும் மாநாடுகள் எல்லாம் திருப்புமுனை மாநாடுகளாக அமையும். ஏன், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் மாநாடுபோல் நடைபெற்ற பொதுக்கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்த சிறப்பான பொதுக்கூட்டமாக அமைந்திருந்தது.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த அந்த மாநாட்டை முன்னின்று நடத்திக் காட்டியவர்தான் நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள். அவரைப் பாராட்டுவது என்பது, என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.
‘நேரு என்றால் மாநாடு; மாநாடு என்றால் நேரு’ என்று பெயர் பெற்றவர் அவர். ‘நேருக்கு நிகர் நேருதான!’ என்றும் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அத்தகைய பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர்தான் நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள்.
மிகக் குறுகிய காலத்தில், பத்து நாட்களுக்குள்ளாக இந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று நாங்கள் எடுத்துச் சொன்ன நேரத்தில், அதை ஏற்றுக்கொண்டு, மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடத்திக் காட்டி இருக்கிறார். அதற்காக அவருக்கு மட்டுமல்ல, அவரோடு இணைந்து பணியாற்றிய திருச்சி ஒன்றுபட்ட மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்திருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் – அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் – அமைச்சர் சிவசங்கர் அவர்கள் – அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் – அமைச்சர் கணேசன் அவர்கள் – அதேபோல், துரை சந்திரசேகரன் – சு.கல்யாண சுந்தரம் – பூண்டி கலைவாணன் – குன்னம் ராஜேந்திரன் – காடுவெட்டி தியாகராஜன் – வைரமணி – நிவேதா முருகன் – கெளதமன் – அண்ணாதுரை – செல்லப்பாண்டியன் ஆகியோர் தங்களது மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்டிருக்கும் வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களை இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
15 கழக மாவட்டங்களில் உள்ள 12,645 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தலா ஒவ்வொரு பொறுப்பாளர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!
கடந்த சில மாதங்களாக தலைமைக் கழகத்தில் இருந்து உங்களையெல்லாம் அழைத்துப் பேசி, உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களைப் பெறச் சொல்லியிருந்தேன். பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிலரை மாற்றவும் சொல்லியிருந்தேன். மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களைப் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
இப்படி பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே ‘வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டையைப் பெற்ற டெல்டா மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மட்டும் இங்கே முதல் கட்டமாக அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கான வகுப்புகள் காலை முதலே இங்கு நடந்திருக்கிறது.
வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில், நம்முடைய மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் – மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ அவர்களும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் – கழக அயலக அணிச் செயலாளர் நண்பர் அப்துல்லா அவர்களும், சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் என்பது குறித்து, நம்முடைய கழக மாணரவணித் தலைவர் – வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அவர்களும் உங்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
நமது திராவிட மாடல் அரசின் மக்கள் நலம் காக்கும் சமூக நலத் திட்டங்கள் குறித்து, நம்முடைய கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா – அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி – டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் இங்கு உரையாற்றி இருக்கிறார்கள்.
கழகத்தின் வரலாறு – அடிப்படைக் கொள்கைகள் – திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் – நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் – திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படைத் தகவல்களை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள். அதேபோல், தேர்தல் பணிகள் குறித்த விதிமுறைகளையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும்.
வருகிற செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, கழகம் தொடங்கப்பட்டு 75-ஆவது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை இப்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் உத்தரவிட்டு அந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஆண்டில்தான் நீங்கள் வாக்குச்சாவடியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கழகத்தின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் பணி என்பதையே அடிப்படையாக மனதில் ஏற்று நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
கொரோனாவின் முதல் அலையின் போது நாம் ஆட்சியில் இல்லை. அந்த நேரத்தில் நம் கழக உடன்பிறப்புகள் சிலரை கொரோனாவுக்கு இழந்தபோதும்கூட, ஒவ்வொரு பகுதியிலும் நம் கழகமே முழுவீச்சில் இறங்கி நிவாரணப் பணிகளைச் செய்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். வாக்குச்சாவடியின் பொறுப்பாளர்களாகிய நீங்கள்தான் அந்தக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களாகிய நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்! இதனை யாரும் மறந்து விட வேண்டாம்!
‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் உங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் முழங்கி இருக்கிறேனே தவிர, வேறு அல்ல.
இன்று முதல், கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்ததுபோல், வெற்றி ஒன்றே உங்களுடைய இலக்காக அமைய வேண்டும். வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகச் சரியாக நீங்கள் நடைபோட வேண்டும்.
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகளும் இருக்கிறது. அதில் குறிப்பாக, வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் உங்களது முதல் பணி! வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கின்றனவா, ஏதேனும் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கின்றனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறதா ஆகியவற்றை முழுமையாகச் சரிபார்க்கும் கடமை உங்களுடையது.
வாக்காளரை நம்மை நோக்கி ஈர்ப்பது அடுத்த பணி! உங்களது வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, தினமும் வாக்காளர்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்வதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வதும் உங்களுடைய இரண்டாவது பணி.
வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவைப்பது மூன்றாவது பணி! இந்த மூன்று பணிகளையும் சிறப்பாகச் செயல்படுத்த வாக்காளர் குடும்பத்துடன் நீங்கள் நெருக்கமான நட்பைக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னால், அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்? சொல்கிறேன்.
முதலில் உங்கள் வாக்குச் சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவருடைய குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது உள்ளிட்ட முழுவிவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் இன்று வழங்கப்பட்டிருக்கும், “திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்” என்ற புத்தகத்தை நீங்கள் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் மிகத் தெளிவாக தெரிந்துவிடும்.
யாருக்கு என்ன தேவையோ அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவையையும் கண்டறிந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தாருங்கள்.
இதனைச் செய்து தர, உங்கள் பகுதியின் ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகச் செயலாளரையோ, மாவட்டக் கழகச் செயலாளரையோ – சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது அமைச்சர்களையோ அணுகுங்கள். நம்முடைய வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் பலமுறை சொன்னாலும், இப்போது திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தப் போகிறேன்.
நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். தினமும் ஒரு மணி நேரத்தை வாக்குச்சாவடிப் பணிகளுக்கு என்று ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று வந்துவிடலாம்.
சில வீடுகளில் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். சில வீடுகளில் பட்டும்படாமல் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல்கூட இருக்கலாம். அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையோடு அவர்களை அணுகுங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நாம் ஆட்சி நடத்திக் கெண்டிருக்கிறோம். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம், எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியில் எந்தக் குறையும் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களாகப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் மக்கள் நம் மீது, நம் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னாரே, வருகிற வழியெல்லாம் வரவேற்பு, சால்வை, புத்தகம், கைத்தறி ஆடைகள், பரிசுப் பொருட்கள், இதையெல்லாம் தருகிறபோது இடையிடையில் மனுக்களைத் தருகிறார்களே, ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் போகிறபோது ஆயிரக் கணக்கில் சேரும். அது குறைந்து குறைந்து இப்போதெல்லாம் அது நூற்றுக் கணக்கில்தான் சேரும் நிலை வந்திருக்கிறது. அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமை என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
கோடிக்கணக்கான பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டம்தான், “மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து” வசதி. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையைப் பெற இருக்கிறார்கள். தற்போது 31 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்று வரும் 1000 ரூபாய் முதியோர் உதவித் தொகையை 1200 ரூபாயாக நாம் உயர்த்தி இருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ – மாணவியர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறப் போகிறார்கள். 13 லட்சம் பெண்களின் நகைக்கடனை ரத்து செய்த அரசு நம்முடைய அரசு. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, மக்களும் மண்ணும் செழிக்கின்ற மாதிரியான ஏராளமான திட்டங்களை உழவர்களுக்கு நாம் செயல்படுத்தி வருகிறோம்.
இப்படி கோடிக்கணக்கானோர் – இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றி, இன்றைக்கு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் பரப்புரையாளர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.
நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச்செய்திகளையும் பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம் அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்.
இன்றைக்கு பரப்புரை பாணியே மாறிவிட்டது. இன்றைக்கு சமூக ஊடகங்கள்தான் சிறப்பான பரப்புரைக் களங்களாக மாறி இருக்கின்றன. வீட்டில் இருந்துகொண்டே, பக்கத்து அறையில் இருந்துகொண்டே வாட்ஸ்அப்-இல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காலம் அவ்வாறு மாறி இருக்கிறது. அந்தக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் நாம் அனுப்பும் செய்தி வீட்டின் பக்கத்தில் மட்டுமல்ல, ஒரே நிமிடத்தில் உலகம் முழுக்க பரவும் வசதியும் வந்துவிட்டது. இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்குத் தொடங்குவதையும் கட்டாயம் செய்ய வேண்டும். அந்தக் கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்குப் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
நம் கொள்கைளைப் பேசுங்கள். நலத்திட்டங்களைப் பதிவிடுங்கள். தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதையாவது சொல்லி நம்மைத் திசை திருப்பி விடுவார்கள். இந்தத் திசை திருப்பலுக்கு எல்லாம் பலியாகி விடக் கூடாது.
ஒருபக்கத்தில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றுகூட நான் சொல்ல விரும்பவில்லை. அவரே இருக்கட்டும். தேர்தல் வரைக்கும் அவர் இருக்கட்டும். இன்னமும் நமக்கு வாக்குகள் அதிகரிக்கும். அதேபோல், தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவும் கூடாது.
சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு – நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இன்னமும் சொல்கிறேன், நம்முடைய தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்புக்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்தில் வேறு ஒரு கட்சி இருக்கிறதா? எனவே அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும்.
ஏனென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளையும் நமது அணி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல – இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்துவிட்டது. இதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது.
பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமானால் – இந்தியாவில், ஜனநாயகமே இருக்காது. ஏன், தமிழ்நாடு என்ற மாநிலமோ – அதற்கான சட்டமன்றமோ – முதலமைச்சரோ – அமைச்சர்களோ – சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.
புதிய நாடாளுமன்றம் கட்டியிருக்கிறார்களே எதற்கு? 888 இருக்கைகளைப் போட்டிருக்கிறார்கள். அது எதற்காக? நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளைப் போட நினைக்கிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பேரால் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.
நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும் – வட மாநில எம்.பி.களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன் மூலமாகத் தடுக்கப் பார்க்கிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாக நான் சொல்கிறேன்.
மாநிலங்களுக்கு – பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு – பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு – பல்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு கட்சிதான், பாரதீய ஜனதா கட்சி! ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது.
ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால் – ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும். இன்னும் சொல்கிறேன், அவ்வாறு அமைந்தால் அது பா.ஜ.க.வினருக்கே ஆபத்தான கொள்கை! அதனால்தான் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு – Indian National Developmental Inclusive Alliance – என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA – என்பது இந்தக் கூட்டணிக்குப் பெயர். எனவே இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இதனை பிரதமராக இருக்கும் மோடி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பா.ஜ.க.வை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து இப்போது ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நோக்கத்தைப் பற்றி இப்போது அல்ல, நான் ஓராண்டு காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனால் என் மீதும் அவர்களுக்குக் கோபம். அதனால்தான் மத்தியப் பிரதேசத்துக்குப் போனாலும் தி.மு.க.வைத் திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தைத் திறந்து வைக்கப் போனாலும் தி.மு.க.வைத் திட்டுகிறார்.
என்ன சொல்கிறார், வாரிசுகளுக்கான கட்சியாம். இதைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. வேறு ஏதாவது யோசித்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்! தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள்! இதனைத் தைரியமாக – பெருமையோடு என்னால் சொல்ல முடியும்.
பா.ஜ.க. யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?
குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது.
மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த மாநிலத்தை ஆளும் மணிப்பூர் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் மணிப்பூர் போலீஸும் கைகோத்துக் கொண்டு மக்களைத் தாக்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, பா.ஜ.க.வைச் சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் சொல்லி இருக்கிறார். மீண்டும் சொல்கிறேன்… இப்படிச் சொல்லி இருப்பது ஸ்டாலின் அல்ல, பா.ஜ.க.வுக்கு எதிரணியில் இருப்பவர்கள் அல்ல. பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார்.
ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து – மனக்கசப்பை உருவாக்கி – வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவுதான் இன்று மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இங்கே ஒரு கொத்தடிமைக் கூட்டம், யார் என்று தெரியும் – அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றிப் பேசினார்களா? வாய்க்கு வந்ததைப் பேசுவாரே பழனிசாமி. அவர் பேசினாரா? பேசவில்லையே. ‘பா.ஜ.க.வுக்கு நான் அடிமையில்லை’ என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடூரத்துக்குக் காரணமான அந்த மாநில முதலமைச்சரையோ ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரையோ கண்டித்தாரா?
பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். நான் அப்போதே கேட்டேன், “பக்கத்தில் யாரை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள்?” என்று கேட்டேன். சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு – அதற்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றம் போனவர் பழனிசாமி. அவருடன் அமைச்சராக இருந்தவர்கள் மீதும் ஊழல் கறை படிந்திருக்கிறது. இந்த ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசுகிறார். பேசலாமா?
நான் இன்னும் கேட்கிறேன். கர்நாடக மாநிலத்தில் ஊழல் பா.ஜ.க. அரசை, ஊழலுக்காகத்தானே அந்த மாநில மக்கள் விரட்டி அடித்தார்கள், தோற்கடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?
அ.தி.மு.க.வினர் மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்துள்ளது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க.வுக்கு பயந்து அடமானம் வைத்தது அ.தி.மு.க.
எனவே உரிமைகளைக் கைவிட்டவர்களும் – காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோத்து வருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூர் ஆகி விடாமல் தடுத்தாக வேண்டும்.
தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பாற்றியாக வேண்டும். நமக்கு முன்னால் உள்ள கடமை என்பது மிக மிக மிகப் பெரியது. ஜனநாயகப் போர்க்களத்தில் முன்னணிப் படை வீரர்கள் நீங்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படைத் தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை நான் ஒப்படைத்திருக்கிறேன். எனது கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருக்கப் போகிறவர்கள் நீங்கள், பணியாற்றப் போகிறவர்கள் நீங்கள். உங்களில் ஒருவனான நான் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன்.
களம் காணுங்கள்! கழகத்தின் வெற்றிக்காகக் களமாடுங்கள்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
இந்தியா வெல்லும்! அதை 2024 சொல்லும்!
நன்றி! வணக்கம்!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.