நீட்’ சம்பந்தமாக இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த மசோதாவினை வரவேற்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கிறார். அதற்காக உள்ளபடியே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்மானம் வந்தபோதும், அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசியல் பார்க்காமல் நாங்களும் ஆதரித்தோம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல, ‘நீட்’-க்காகக் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவையும் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது வரவேற்றிருக்கிறது. நீங்கள் வெளிநடப்பு செய்த நேரத்திலே, இந்த நீட் பிரச்சினை தொடர்பாக நான் பேச ஆரம்பித்தேன். அப்போது நீங்கள் வெளிநடப்பு செய்த காரணத்தினாலே, இங்கேயிருந்து நீங்கள் கேட்க முடியாவிட்டாலும், நான் என்ன பேசினேன் என்பதை வெளியிலே போய் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள். அதற்கும் மகிழ்ச்சி; என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேட்கிற ஒரே கேள்வி, நீட் பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும், இந்தச் சட்டமன்றத்திலே இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, அரசின் மூலமாக நாம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அதை அவர்கள் திருப்பியனுப்பி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அந்தத் தகவலை ஏன் சட்டமன்றத்திலே அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. ஆட்சி சொல்லவில்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி. இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் பேசி, பிரச்சினையை உருவாக்குவதற்கு நான் தயாராக இல்லை. ஏனென்றால், மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொண்டு மாளக்கூடிய ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒருங்கிணைந்து இந்த அவையில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலே, இந்தத் தீர்மானத்தை நீங்கள் தயவு கூர்ந்து, வரவேற்று இதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று மீண்டும் கேட்டு அமைகிறேன்.
இங்கே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்கள். அது தேவையா, தேவையில்லையா என்பதைப்பற்றிக்கூட நான் பேச விரும்பவில்லை. நல்ல நோக்கத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கு யார் காரணம்? அது அவரவர்கள் மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும். எனவே, அதை விவாதித்துக் கொண்டிருந்தால், இந்தச் சட்டமுன்வடிவினை நிறைவேற்றுவதிலே சங்கடங்கள் இருக்கின்றன; சச்சரவுகள் இருக்கின்றன என்ற ஒரு கெட்ட பெயர் நம்முடைய அரசுக்கு வந்துவிடும். இங்கேயிருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு வந்துவிடும். எனவே, நான் அருள்கூர்ந்து கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை எல்லாம் சொன்னார்கள். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம், அவர்கள் வெளிநடப்பு செய்து, வெளியே சென்றபோதே நானே பதில் சொல்லிவிட்டேன். அதனால்தான் நான் அதைப்பற்றி விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை. அந்த அடிப்படையில்தான், நான் திரு. செல்வப் பெருந்தகை அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்தத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றுகிற நேரத்தில், சச்சரவுகளை ஏற்படுத்த வேண்டாம்; குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? எவ்வளவு பேர் கலந்து கொண்டார்கள் என்பதல்ல முக்கியம். எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்? நேற்று உயிரிழந்த தனுஷ் என்ற மாணவனைச் சேர்த்து 15 பேர் மாண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டுதான், இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய தியாகம் வீண்போகக்கூடாது என்பதுதான் இந்த அரசினுடைய இலட்சியம். எனவே, அதற்கு ஏற்ற வகையில் மாண்புமிகு உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.