நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
அனைவருக்கும் அன்பான வணக்கம்!
72 ஆண்டு காலமாக தொடர்ந்து மக்களுக்கு, இந்த நாட்டுக்கு உழைத்துக் கொண்டு இருக்கின்ற மாபெரும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து விருதுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கொரோனா காலமாக இருப்பதால் இங்கே கூட்டத்தைக் குறைத்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழ்ப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கிப் பேசும் போது, ‘இன்னும் எட்டே மாதத்தில் ஆட்சி மாறப் போகிறது’ என்று நான் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்டது; கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது; ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டது. அந்த மகத்தான மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் முப்பெரும் விழா இது என்பதால், கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு, எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்களது உழைப்பால், வியர்வையால், ரத்தத்தால் கிடைத்த வெற்றி இது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கழக உடன்பிறப்புகள் உழைத்ததால் கிடைத்த வெற்றி இது. எந்தப் பதவிகளுக்கும் வராமல், கழகத்தின் தொண்டன் என்ற பதவியை மட்டுமே பெருமையாகக் கருதி வாழ்ந்து வரும் தொண்டர்களை நோக்கி வணங்கி என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 17. தந்தை பெரியாரால் ஏற்றிவைக்கப்பட்ட ‘இனமானச் சுடரொளி’ பேரறிஞர் அண்ணா அவர்ளுடைய பிறந்தநாள் இன்று – செப்டம்பர் 15. அன்னைத்தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் செப்டம்பர் 17. இந்த மூன்று விழாக்களையும் இணைத்து செப்டம்பர் 15-ஆம் நாளில் ‘முப்பெரும் விழா’ நடத்தப்படுகிறது.
அதிலும் இந்த ஆண்டுக்கு இன்னும் சில சிறப்புகள் சேர்ந்திருக்கிறது. ‘நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் நாம்’ என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த நீதிக்கட்சி முதன்முதலாக 1921-ஆம் ஆண்டு தான் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்தது. அதன் நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடி வருகிறோம். கழகம் ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பதும் இந்த ஆண்டுதான். நான் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஆண்டும் இதுதான். இப்படி பல்வேறு சிறப்புகளுக்கான ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது; நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் ஐந்து பெருமக்கள் விருதுகளைப் பெற்றுள்ளார்கள்.
மிசா. பி. மதிவாணன் அவர்கள் பெரியார் விருதையும்;
தேனி எல். மூக்கையா அவர்கள் அண்ணா விருதையும்;
கும்மிடிப்பூண்டி கி. வேணு அவர்கள் கலைஞர் விருதையும்;
வாசுகி ரமணன் அவர்கள் பாவேந்தர் விருதையும்;
பா.மு. முபாரக் அவர்கள் பேராசிரியர் விருதையும் பெற்றுள்ளார்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1985-ஆம் ஆண்டு இத்தகைய விருதுகளை வழங்கும் முறையை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்ட பெருமக்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டிப் போற்ற வேண்டும் என்று இந்த விருதுகள் வழங்கும் முறையை தொடங்கி வைத்துள்ளார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களால் ‘மாணிக்கம்’ என்று புகழப்பெற்ற மதிவாணன், தந்தைப் பெரியார் பெயரிலான விருதைப் பெற்றிருக்கிறார். தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர். மன்னையார், கோ.சி. மணி அவர்களோடு சேர்ந்து இயக்கப் பணி ஆற்றியவர். 1965-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். எமர்ஜென்சியின்போது கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவர். அவர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்தார்கள். அவரது மகள் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். அந்தளவுக்கு கழகத்தைத் தனது குடும்பமாக நினைத்து பணியாற்றக் கூடியவர் மதிவாணன் அவர்கள்.
பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை தேனி மூக்கையா அவர்கள் பெற்றுள்ளார்கள். கழகத்துக்கு தேனீயைப் போல உழைக்கக் கூடியவர். அதனால்தான் அவரை தலைவர் கலைஞர் அவர்கள், ‘மூக்கையா கழகத்தின் மூச்சையா’ என்று பாராட்டினார்கள். கருப்பு சிவப்பு துண்டோடு வலம்வரக் கூடியவர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையாக இருந்தாலும், மிசாவாக இருந்தாலும் அனைத்திலும் பங்கெடுத்துச் சிறை செல்லத் தயங்காதவர். கழகப் பேச்சாளர்களை தனது மாவட்டத்தின் பட்டிதொட்டியெல்லாம் அழைத்துச் சென்று தொடர்கூட்டங்கள் நடத்தியவர் மூக்கையா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதை கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள் பெற்றுள்ளார்கள். மிசாவில் என்னோடு சிறையில் இருந்தவர் வேணு அவர்கள். கருப்புக்கொடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, தலைவர் கலைஞரோடு சென்னை மத்திய சிறையில் இருந்தவர் வேணு அவர்கள். கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஒருவானது முதல் அந்த ஒன்றியத்தையும் அதன்பிறகு திருவள்ளூர் மாவட்டத்தையும் கழகத்தின் கோட்டையாக மாற்றியவர் கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள்.
பாவேந்தர் பெயரிலான விருதை வழக்கறிஞரான வாசுகி ரமணன் அவர்கள் பெறுகிறார்கள். வாசுகி ரமணன் அவர்கள், கழகத்துக்காக மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் வாதாடியவர்; 1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் இவரது கார் எரிக்கப்பட்டது. ஆனாலும் அஞ்சாமல் கழகப்பணி ஆற்றி வந்தார். தலைவர் கலைஞர் அவர்கள் 2001-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டபோது, மத்திய சிறை வாசலில் காவல்துறை நடத்திய தாக்குதலில் கடுமையாகத் தாக்கப்பட்டார். எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாத காலம் மருத்துவமனையில் இருந்தவர் வாசுகி ரமணன் அவர்கள்.
பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதை முபாரக் அவர்கள் பெறுகிறார்கள். இளைஞரணியில் இருந்து வளர்ந்தவர் முபாரக் அவர்கள். இளைஞரணிப் பொறுப்பாளராக நான் இருந்தபோது நீலகிரிக்கு அழைத்துச் சென்று 300 இடங்களில் கொடி ஏற்ற வைத்தவர் முபாரக். கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் மலையைப் போல உறுதியானவர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதில் சிகரத்தை போல உயரமானவர் முபாரக் அவர்கள்.
இத்தகைய பெருமைக்குரியவர்கள், பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ளார்கள். பெரியார் – அண்ணா – கலைஞர் – பாவேந்தர் – பேராசிரியர் ஆகியோர் தனி மனிதர்கள் அல்ல. ஐந்து மாபெரும் தத்துவத்தின் அடையாளங்கள்!
பெரியார் என்றால் சமூகநீதி!
அண்ணா என்றால் மாநில உரிமை!
கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை!
பாவேந்தர் என்றால் மொழிப்பற்று!
பேராசிரியர் என்றால் இனமானம்!
– இவைதான் இந்த இயக்கத்தின் கொள்கைகள். அந்த வழியில்தான் நாம் இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களது உழைப்பால், தகுதியால், திறமையால், தியாகத்தால் இந்த விருதை பெற்றுள்ளார்கள். இந்த விருதை வழங்குவதால் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.
இதுபோன்ற விழாக்கள், நாம் யார் – நமது கொள்கை என்ன – எத்தகைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்தும் விழாக்கள்.
‘முரசொலி சில நினைவலைகள்’ – என்ற தொடர் கட்டுரை 100 நாட்களாக முரசொலியில் வெளியானது.
நம்முடைய மரியாதைக்குரிய; நான் எப்போதும் அண்ணன் என்று அழைக்கும் முரசொலி செல்வம் அவர்களை, ‘எங்களை உருவாக்கியவர்’ என்று இங்கே பலரும் சொன்னார்கள். என்னை உருவாக்கிய காரணகர்த்தாக்களுள் அவரும் ஒருவர். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்; இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரே மறந்தாலும், தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு இன்று பேசியது எப்படி இருந்தது என்று கேட்டு தெரிந்து கொள்வேன். அவரும் என்னுடைய பேச்சை தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்த்துவிட்டு தொடர்புகொண்டு ஊக்குவிப்பார். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நம்முடைய தலைவர் அவர்கள் இல்லை என்ற குறையை எனக்கு இன்றைக்குப் போக்கிக் கொண்டு இருப்பவர் முரசொலி செல்வம் அவர்கள்தான். தொடர் கட்டுரையாக அது வெளிவந்தாலும், படித்தவர்களுக்குத் தெரியும், அது ஒரு நாவலைப் போல சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது. அண்ணன் முரசொலி செல்வம் அவர்களின் தனித்திறமை அது. முரசொலியின் தொடக்க காலத்தில் நானும் எனது சகோதரர்களும் எப்படியெல்லாம் பணியாற்றினோம் என்பதை அண்ணன் செல்வம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். முரசொலி என்பது தாளாக மட்டும் இல்லாமல் வாளாகவும் இன்றைக்கு நம்முடைய கைகளில் இருக்கிறது. அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் அதற்குச் சாட்சியாக இருக்கிறது. ”கழகத்தவர்க்கு இது பொக்கிஷம். மூத்தவர்களுக்கு இது பழைய நாட்குறிப்பு. இளைஞர்களுக்கு எதிர்கால வழிகாட்டி. பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு இது பாடப்புத்தகம். புலனாய்வு பத்திரிக்கையாளர்களுக்கு இது ரகசியங்களின் தொகுப்பு. மொத்தமாய் சொல்லவேண்டுமானால் கலைஞர் அவர்களின் ‘இன்னொரு நெஞ்சுக்கு நீதி’! ” – என்று பெருமையோடு நான் எழுதி இருக்கிறேன்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் 1992-ஆம் ஆண்டு முரசொலி செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். சட்டமன்ற வரலாற்றில் முன்னும் பின்னும் எடுத்துக்கட்டு இல்லை என்கிற அளவுக்கு பேரவைக்குள் கூண்டு வைக்கப்பட்டு அதில் செல்வம் அவர்கள் ஏற்றப்பட்டார்கள். ‘கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்’ என்று ‘முரசொலி’யில் கலைஞர் எழுதினார்கள். கலைஞர் அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால், “இந்த புத்தகம் கண்டேன், குதூகலம் கொண்டேன்” என்றுதான் நான் சொல்ல வேண்டும். அத்தகைய மகிழ்ச்சியை நீங்களும் பெற வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். இன்றைய இளைஞர்கள், அதிலும் குறிப்பாக, கழகத்தை நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். நமது கடந்த கால வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இயக்கம் எத்தகைய சோதனைகளை, வேதனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். நமக்கு முன்னால் தியாகம் செய்த தீரர்களின் முகங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால்தான் புத்தகங்களை பரிசாகக் கொடுங்கள் என்பதை ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை முரசொலி செல்வம் அவர்களுக்குப் பாராட்டுகளை – வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதனை அறிவித்தபோது பேரவை அதிரக் கிடைத்த வரவேற்பு என்பது நூற்றாண்டு எழுச்சியை உணர்த்துவதாக அமைந்திருந்தது. ‘உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம்! எங்களுக்கு வாக்களியுங்கள்!” என்று நாட்டு மக்களிடம் நாம் வாக்குகளைக் கேட்டோம். இந்த நான்கு மாதகாலத்தில் கழக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் உங்களுக்குத் தெரியும்.
சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்!
* பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டுள்ளது
* பால் விலை குறைக்கப்பட்டுள்ளது
* பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
* கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது.
* நியாய விலைக் கடைகளில் 14 விதமான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலமாக லட்சக்கணக்கானவர்களின் கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதிநாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட உள்ளது.
* அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்பட இருக்கிறது.
* வ.உ. சிதம்பரனார், பாரதியார் ஆகியோரைப் பெருமைப்படுத்தி இருக்கிறோம்.
* வேளாண்மைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
* குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புச் சேர்க்கை அமையவும் மசோதா நிறைவேற்றி இருக்கிறோம்.
* சென்னையில் கலைஞருக்கு நினைவகம் அமையப் போகிறது.
* மதுரையில் கலைஞர் பெயரால் நூலகம் அமையப் போகிறது.
* போட்டித் தேர்வு எழுத தமிழைக் கட்டாயம் ஆக்கி இருக்கிறோம்.
* ஒருகாலப் பூசை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை கொடுத்திருக்கிறோம்.
* ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
* இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 விழுக்காடு மாற்றியிருக்கிறோம்.
– இவை அனைத்தும் 100 நாட்களுக்குள் செய்யப்பட்டவை. 100 நாளில் செய்ததில் சிலவற்றை மட்டும்தான் நான் சொல்லி இருக்கிறேன். இவை அனைத்துக்கும் மேலாக, இந்த நான்கு மாதகாலத்தில் நாட்டு மக்களிடையே ‘நல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். இந்த நான்கு மாதகாலத்தில் ‘வல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம்! ‘கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் இவர்கள்’ என்று பெயர் எடுத்துள்ளோம்! ‘தி.மு.க. ஆட்சி சொன்னதைச் செய்யும்’ என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறோம்.
நான்கு மாதகாலத்தில் இத்தனைத் திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றால் அடுத்து என்னென்ன திட்டங்கள் வரவிருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு மாதம் முடியும்போதும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப் போகிறது. கொரோனா பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றியதுதான் மாபெரும் சாதனையாகும். இப்படியாக மக்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றித் தருவோம். கடந்த ஒருமாதமாக நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய அமைச்சர்கள், தங்கள் துறை சார்பில் ஏராளமான அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அந்த பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று மாதம் இருமுறை ஒவ்வொரு துறையையும் நான் ஆய்வு செய்து மக்களிடத்தில் சேர்க்கின்ற கடமைதான் என்னுடைய கடமை.
இதனை இங்கு சொல்வதற்கு காரணம், இன்னும் நமக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள் – குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏங்கும்படியாகும் நம் பணி இருந்திட வேண்டும்.
இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளத்தை கழகத் தொண்டர்கள் உருவாக்கியாக வேண்டும். “பெரியாரின் பிள்ளைகள் நாம் – பேரறிஞரின் தம்பிகள் நாம் – முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாம்” என்பதைக் கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ்நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம் – சபதமேற்போம்!
நன்றி வணக்கம்!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.