இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை

இல்லம் தேடிக் கல்வி என்ற சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இன்றைய நாள்செயல்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும்கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமானபாராட்டுதலை, வாழ்த்துதலை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே

கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!

செல்வம் பிறக்கும்; நாம் தந்திடில் தீர்ந்திடும்!

கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்!”

என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

அவரது பாடலுக்கேற்ற செயலை இன்றைய நாள் இந்தப் பள்ளிக்கல்வித் துறைசெய்துள்ளது. உள்ளபடியே நான் இன்றைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன், இப்போது அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய மகிழ்ச்சிக்குகூடுதலான ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ஆருயிர் நண்பர் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக, துக்க நிகழ்ச்சிகளில் ஒரு உடன்பிறப்பாக, ஒரு தம்பியாக, ஒரு சகோதரனாக, ஏன், ஒரு தொண்டனாக இருந்து எனக்கு துணைநின்றவர் மறைந்த அன்பில் பொய்யாமொழி அவர்கள். இந்த நிகழ்ச்சியில் அவரை நினைத்து நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். காரணம், தன்னுடையமகன் இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு, அந்தக் கல்வித் துறை மூலமாக செய்துவரக்கூடிய செயல்களையெல்லாம் பார்த்தால், அவருடைய தந்தை பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பாரோ, அத்தகைய பெருமையை நான் இன்றைக்கு அடைந்துகொண்டிருக்கிறேன்.

இல்லம் தேடிக் கல்வி என்பது சாதாரணத் திட்டமல்ல! எல்லாத் திட்டங்களையும்போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லிவிட முடியாது. இந்தத் திட்டம்தான் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியருடைய வாழ்விலே ஒளியேற்றப் போகிறது.  அதன் மூலமாக, நூற்றாண்டு காலத்திற்கு அறிவினுடைய வெளிச்சம் பரவ இருக்கிறது. மிகப்பெரிய  கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய விஷயங்ள்ல்லாம் இப்படி சிறுசிறு அளவில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியைதிண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகக் கொண்டு சேர்த்தது ஆரம்பகால திராவிடஇயக்கம். திராவிடம் என்றால் என்ன என்று, சில கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக்கூடாது.  

நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள மாநகராட்சிப்பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராசர் அவர்கள்மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள்நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுச் செழுமைப்படுத்தப்பட்டது.

இதுபோன்ற சிறப்பு பெறப்போகக்கூடிய திட்டம்தான் இந்த இல்லம் தேடிக்கல்விஎன்கிற திட்டமாகும்.

கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும்பாதிக்கப்பட்டார்கள் என்று சொன்னாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டது யார் என்று கேட்டால் நம்முடைய மாணவர்கள்தான். பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த அவர்களைவீட்டுக்குள் முடக்கி விட்டது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம். பள்ளிக்கூடம்என்ற பரந்த வெளியைப் பயன்படுத்த முடியாமல் வீட்டுக்குள் இருந்ததே குழந்தைகளின்மனதைப் பாதித்துவிட்டது. அது அவர்களது படிப்பைபடிக்கும் முறையைபடிப்பில்இருக்கக்கூடிய ஆர்வத்தைக் குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தப் பாதிப்பை எப்படி சரிசெய்வது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்சிந்தித்தார்கள். பள்ளிக்கு வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மேலும் கூடுதல்நேரத்தை பள்ளி நேரம் போலவே படிப்பில் பயன்படுத்துவதற்காகஉருவாக்கப்பட்டதுதான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி!

உங்கள் வீட்டுக்கு அருகிலேயேஇதற்காக தனியாக இடங்கள் தேர்வுசெய்யப்படும். நாள்தோறும், ஒவ்வொரு நாளும் மாலையில் ஒரு மணி நேரமோஇரண்டு மணி நேரமோ வசதிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வந்து உங்களைபடிக்க வைப்பார்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இதற்காக தனியாக இடங்கள் தேர்வு செய்யப்படும். நாள்தோறும் மாலையில் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில்தன்னார்வலர்களின்ஒத்துழைப்போடு இந்தத் திட்டம் தொடங்கப் போகிறது.

பள்ளியோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல்; வீட்டுக்கும் வந்துஉங்களுக்குக் கற்றுத் ரக்கூடிய கடமையின் தொடர்ச்சிதான் இல்லம் தேடிக் கல்வி‘ என்கிற திட்டமாகும்.

எப்போதுமே ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால்தான் புதிய பாதை அதன்மூலமாகத் திறக்கும். அப்படி கொரோனா என்ற நெருக்கடியில் உதயமானதுதான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டமாகும்.

கொரோனா என்ற பெருந்தொற்று குறைந்ததன் காரணமாக பல்வேறுதளர்வுகளை நாம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறோம். அதில் முதலாவது, கல்வி நிலையங்களைத் திறந்தது ஆகும். முதலில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டன. அடுத்ததாகவருகிற நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கப்படஇருக்கிறது.

இந்த ஊரடங்குக் காலத்தில் பள்ளிக்கு வந்து பயிலக்கூடிய சூழல்இல்லாவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தோம். ஆனால், நேரடிக் கல்விதரும் பயனை ஆன்லைன் வகுப்புகளால் தரமுடியாது என்பதுதான் உண்மை. அதனால்தான் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இப்படி கற்றல் இடைவெளிஏற்படுவதற்கு மாணவர்களோ, பள்ளியோ, ஆசிரியர்களோ காரணம் அல்ல. கொரோனாகாலச் சூழ்நிலை அதற்கு காரணமாக அமைந்துவிட்டது. நடந்தது நடந்ததாகஇருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கவேண்டும், அதை நடத்திக் காட்ட வேண்டும்.

மீண்டும் பள்ளியை நோக்கி வரும் மாணவர்களை, ஆசிரியர்கள் இனிமையாகநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாடம் நடத்துவதோடு, மாணவர்களைப்பண்போடும் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். கடந்தகாலக்கசப்பை மறப்பதாக உங்களது கனிவு இருக்க வேண்டும். அதேபோல், மாணவ, மாணவியரும் படிப்பில் அதிக ஆர்வத்தை காட்ட வேண்டும், செலுத்த வேண்டும், கவனச்சிதைவுகள் இருக்கக் கூடாது. கொரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்டஅதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும்.

பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களைப் பழைய நிலைக்கு மடைமாற்றம்செய்துவிட முடியாது. அதனால்தான் பள்ளி நேரம் முடிந்த பிறகும் சில மணிநேரங்கள்மாணவர்களுக்குப் பயிற்சிகள் தரப் போகிறோம். இதனை ஆசிரியர்களோடு சேர்ந்துதன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் செயல்படமுன்வந்திருக்கிறார்கள். இந்த தன்னார்வலர்களையும், தொண்டு நிறுவனங்களையும்நான் மனதார  வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றமுறையில் அவர்களுக்கு நன்றி செலுத்தவும் நான் விரும்புகிறேன்.

தனித்துவம் கொண்ட இந்தத் திட்டம், வகுப்பறையைப் பள்ளிகளுக்குவெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சி. இத்திட்டம் மற்றமாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கப் போகிறது.

தமிழ்நாடு சிறந்த கல்வித்துறை அலுவலர்களைக் கொண்ட மாநிலம். நம் கல்வித்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டது. முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும், வட்டாரக் கல்வி அலுவலர்களும் ஆழ்ந்தஈடுபாட்டுடன் அயராமல் பணியாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

பெற்றோரும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், கற்ற இளைஞர்களும், பரந்தஉள்ளம் பெற்றவர்கள். ஆகவே, நீங்களெல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுத்தவேண்டிய திட்டம் இந்தத் திட்டமாகும். இந்தத் திட்டம் மாலை நேரத்தையும் பள்ளியாகமாற்றப் போகிறது. வீடுகளில் இருந்து படிக்கும் சூழ்நிலை இல்லாத பிள்ளைகளுக்குப்பேருதவியாக இருக்கும். ஆசிரியர்கள் தங்கள் சேவையை மனமுவந்து ஆற்ற வேண்டும்என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொடையாகவழங்க விரும்பினால் அவர்களை இந்த அரசு வரவேற்கத் கடமைப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். படித்த இளைஞர்கள் தங்களதுஓய்வு நேரத்தை இதில் பங்கெடுப்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றலாம்.

கல்வியைத்தான் நிரந்தரமான செல்வம் என்று சொல்கிறார் திருவள்ளுவர். யாராலும் அழிக்க முடியாத செல்வம் என்றும் சொல்கிறார். கல்வி அறிவைப்பயன்படுத்தப் பயன்படுத்த அந்தச் செல்வமானது அதிகமாகிக் கொண்டே போகும்என்றும் சொல்கிறார். அத்தகைய கல்விச் செல்வத்தை அனைத்துக் குழந்தைகளும்பெற்றாக வேண்டும். அதனால்தான் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலானகல்வியை மேம்படுத்துவதை மிக முக்கியமான நோக்கமாக திராவிட முன்னேற்றக் கழகஅரசு அதை வகுத்து வைத்திருக்கிறது.

சமூகநீதிசுயமரியாதைமனிதநேயம்சமத்துவம் கொண்டவர்களாக நமதுமாணவச் செல்வங்கள் வளர வேண்டும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும்வேலைவாய்ப்பு என்பது திராவிட இயக்கத்தினுடைய அடிப்படையான கொள்கைளில்ஒன்று. அந்த அடிப்படை நோக்கங்களை அடைய இந்த இயக்கம் பெரும் புரட்சிகளைநடத்தியிருக்கிறது.

இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு காலம் இருந்தது. அதனை மாற்றிய இயக்கம்தான் நம்முடைய திராவிடஇயக்கம்! இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இனத்தின் ஆட்சி என்பதை நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம்தான் நம்முடைய இயக்கம். ஆகவே, ஆட்சியியலின் இலக்கணம் என்று கம்பீரமாக சொல்லக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமத்துவம் ஆகிய தத்துவங்களை அரசியலில் மட்டுமல்ல, ஆட்சியியலில் முன்னெடுக்க நிலைக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி. அந்த நெறிமுறைகளை வென்றெடுக்க எந்நாளும் உழைக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. இந்த நெறிமுறைகள் சமூக,பொருளாதார கல்வித் திட்டங்களிலும் மின்ன வேண்டுமென்று நினைக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. அந்த அடித்தளத்தில்தான், இதுபோன்ற திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

இன்றைக்கு அனைத்துச் சமுதாய மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்முன்னேறி அதிகாரம் செலுத்தும் இடத்துக்கு வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு அடிப்படை, திராவிட இயக்கத்தை வலுவுடன் வழிநடத்தி; இந்தஇனத்தின் அறிவையும் மானத்தையும் தட்டியெழுப்பிய தலைவர்களான தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களும் போட்ட விதைதான்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி இந்த நாட்டை வளர்க்கும்ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஏழைஎளிய, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய மேன்மைக்காகவும்எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்கல்வித் துறையாக இருந்தாலும்பள்ளிக்கல்வித் துறையாக இருந்தாலும், அனைவருக்கும் கல்வியைஉன்னதமான கல்வியை நோக்கமாகக் கொண்டுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பார்போற்றும் பள்ளிக்கல்வித் துறையின் இந்தத்திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவிரைவில் மாற்றமுடியும். பள்ளிக்கும் இல்லத்துக்குமான இடைவெளி குறையும். இல்லங்களும்பள்ளிகள் ஆகும்! பள்ளிகளையும் இல்லங்களாக நினைத்து மாணவச் செல்வங்களேநீங்கள் பயனுற வேண்டும்!

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

மறந்து விடவில்லை, இன்றைக்கு நாம் மனதில் பதிய வைத்திருக்கின்றோம். நான் பலநிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து எத்தனையோ நிறுவனங்கள், எத்தனையோ பத்திரிகைகள் ஒரு மதிப்பெண் போட்டது. அந்த மதிப்பெண் போடுகிறபோது முதலமைச்சர் நம்பர் 1 மு.க.ஸ்டாலின் என்று போடுகிறார்கள், அதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று வரிசைப்படுத்தி போடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதைவிட தமிழ்நாடு நம்பர் 1 என்ற நிலைக்கு வரவேண்டும், அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.