கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.11.2021 அன்று  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.  அதன் தொடர்ச்சியாக, இன்று (15.11.2021) ஒன்பதாவது நாளாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், தோவாளை, கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள சுமார் 75 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தோவாளை வட்டம், தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வு மாளிகையில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த  கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம், பறக்கின்காலைச் சேர்ந்த திரு. பாஸ்கரன் அவர்களின் குடும்பத்திற்கு 4 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெள்ளப் பாதிப்புகளை துரிதமாக சீர்செய்திடவும், நோய் தொற்று ஏற்படாவண்ணம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரத்தை பேணிக் காத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை எவ்வித குறைபாடுமின்றி வழங்கிடவும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.   பின்னர், மேலாங்கோட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாழைப் பயிர் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பயிர்சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.  இறுதியாக கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயிலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

இந்நிகழ்வில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கள்  கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  கேஆர். பெரியகருப்பன், கீதா ஜீவன்,  அனிதா  ஆர்.ராதாகிருஷ்ணன்,  த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், என்.தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, சுரேஷ் ராஜன், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. அரவிந்த், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.