முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  22.11.2021 அன்று திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 முடிவுற்ற  திட்டப் பணிகளை திறந்து வைத்து, 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து, எரிசக்தித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குண்டடம் வட்டாரம், கொழுமங்குழியில் 24 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் மற்றும் தாராபுரம் வட்டம், மாம்பாடி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் 16 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம், என மொத்தம் 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூகநலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் 4,335 பயனாளிகளுக்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.  முன்னதாக, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.