தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.4.2022) தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்து, 74 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,427 பயனாளிகளுக்கு
71 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்: சட்டக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துதல், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், மாணவ, மாணவியர்களுக்கு விடுதிக் கட்டடங்கள் கட்டுதல், பழுதடைந்த கல்லூரிக் கட்டடங்களை சீரமைத்தல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சட்டத்துறை சார்பில் தேனியில் 89 கோடியே 1 இலட்சத்து 11 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை; ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், சாலை வசதிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நகரப் பகுதிகள் போன்ற வளர்ச்சியை ஊரகப் பகுதிகளும் பெற்றிட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மந்திசுனை – மூலக்கடை மற்றும் நாகலாபுரம், கொத்தப்பட்டி, கோகிலாபுரம், கோடாங்கிபட்டி, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், பொன்னன்படுகை, நரசிங்காபுரம், டொம்புச்சேரி, போ.அம்மாபட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நியாய விலைக்கடை கட்டடங்கள், ஜி.கல்லுப்பட்டி முதல் காமக்காபட்டி வரை, அம்மாபட்டி முதல் விசுவாசபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட 5 கோடியே 32 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவிலான பணிகள்;
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் குன்னூர், மார்க்கையன் கோட்டை மற்றும் சிலமலை ஆகிய இடங்களில் 11 கோடியே 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்;
பள்ளிக்கல்வித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜி.கல்லுப்பட்டி, பெரியகுளம், பூதிப்புரம், மேலசிந்தலைச்சேரி, எருமலைநாயக்கன்பட்டி, அம்மாபுரம் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
7 கோடியே 62 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் குடிநீர் வசதிகள்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் போடிநாயக்கனூர்நகராட்சியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி தளம், உடற்பயிற்சிக்கூடம்; என மொத்தம் 114 கோடியே 21 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், இலட்சுமிபுரத்தில் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் களகண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையக் கட்டடம்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தேனியில் 3 கோடியே 47 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபான்மையின மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையக் கட்டடம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்ராசு கவுண்டர் குளம் மேம்பாட்டுப் பணிகள், கம்பம் நகராட்சியில் 7 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் வாரச் சந்தை மேம்படுத்தும் பணி, தேனியில் 3 கோடியே 33 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் எ.வாடிபட்டி ஊராட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி, கீழவடகரை ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி, அத்தியூத்து ஊராட்சியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி உள்ளிட்ட 18 கோடியே 5 இலட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள்; பள்ளிக் கல்வித்துறை சார்பில் இராசிங்காபுரம், எருமலை நாயக்கன்பட்டி, அப்பிபட்டி, சருத்துப்பட்டி, கு.லட்சுமிபுரம், எஸ்.கதிர்நரசிங்கபுரம், சில்வார்பட்டி, பெரியகுளம், க.புதுப்பட்டி, குச்சனூர், லோயர்கேம்ப், மேலசொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, கொடுவிலார்பட்டி, கோட்டூர், கொண்டமநாயக்கன்பட்டி, வாய்கால்பாறை ஆகிய இடங்களில் 32 கோடியே 85 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள்; என மொத்தம் 74 கோடியே 21 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்: வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தாட்கோ, தொழில் வணிகத்துறை (மாவட்ட தொழில் மையம்), கலைப் பண்பாட்டுத் துறை, பட்டு வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வனத்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன், எ. மகாராஜன், கே.எஸ். சரவணகுமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ. முரளிதரன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.