ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் – முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான துணை அமைப்பாக விளங்கும் மாணவரணியின் சார்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு இன்றைய தேவையை கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு!  ஆதிக்கத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்களால் உருவான இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 75 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் நமது மாணவர்களின் கொள்கை வீரியம் குன்றாமல் வளர்ந்தே வருகிறது. அதற்குச் சான்றாக, நேற்றும் இன்றும் கழக மாணவரணி நடத்திய “கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம்” இருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்துள்ளது.

கழகத்தின் ஒரு துணை அமைப்பு, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டின் அமைச்சர் பெருமக்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மொழியுரிமைக்காகவும் மாநில உரிமைக்காகவும் ஓயாமல் குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர்கள், மாணவத் தலைவர்கள், அரசியல்சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து அவர்களின் வாயிலாகத் திராவிடக் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறது.

#NEET – #CUET நுழைவுத் தேர்வுகள், தேசிய கல்விக் கொள்கை, அரசின் அனைத்து நிலைகளிலும் அப்பட்டமான இந்தித் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்கள் காவிமயமாக்கல், மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரங்கள் டெல்லியில் குவிக்கப்படுவது, நியமனப் பதவியில் இருப்போர் மக்களாட்சியின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் போக்கு அதிகரிப்பது என ஒன்றிய பாஜக அரசு அமைந்ததில் இருந்து கடந்த எட்டாண்டுகளாக இந்தியா சந்தித்து வரும் தலையாய சிக்கல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்நிலையில், “திராவிட மாடல்” ஆட்சியியலை இந்தியா முழுமையும் அறிந்துகொள்ளும் வகையிலும்; நமது கொள்கைகளை அனைத்திந்தியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எதிரொலிக்கும் வகையிலும் காலத்தே ஒரு கருத்தரங்கைக் கழக மாணவரணி நேற்றும் இன்றும் கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது கண்டு பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இதனை முன்னெடுத்த கழக மாணவரணிச் செயலாளர் தம்பி சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., அவர்களுக்கும் மாணவரணி இணை-துணைச் செயலாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இந்தியாவின் அனைத்துத் திசைகளில் இருந்தும் நம் திராவிடத் தலைநகராம் சென்னைக்கு வந்து கருத்தரங்கத்துக்கு வலுவும் பொலிவும் ஊட்டி, இந்திய அளவில் இதற்குக் கவனத்தைப் பெற்றுத் தந்த தலைவர்கள், செயற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றிகள்! மாணவரணி உடன்பிறப்புகளுக்கு இன்னும் நிறைய பணி காத்திருக்கிறது, இந்த கருத்தரங்கு ஒரு தொடக்கமே என்பதை நினைவில் கொண்டு, தொடர்ந்து உழைத்திடுக!