மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமதுஅரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கக்கூடிய இந்த நேரத்திலே, தங்களின் அனுமதியோடு விதி 110-ன்கீழ் நான் சில கருத்துக்களை இந்த அவையில் பேசியிருக்கிறேன். அதையொட்டி, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பான பல திட்டங்களை அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி வரிசையிலே, முன்வரிசையிலே உட்கார்ந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர்கள், உறுப்பினர்கள் மிகச் சிறப்பான வகையிலே அதனை வரவேற்று எனக்கு வாழ்த்துச் சொல்லி, இந்த அரசுக்குப் பாராட்டைத் தெரிவித்து உரையாற்றியிருக்கிறீர்கள். அதைத் தொடர்ந்து நம்முடைய மாண்புமிகு அவை முன்னவர் அவர்களும் இங்கே வாழ்த்திப் பேசியிருக்கிறார்கள். நம்முடைய மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களும் வாழ்த்தியிருக்கிறார்கள். அப்படி வாழ்த்திய அத்தனைப் பேருக்கும் நான் இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை அரசின் சார்பிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இந்த முதலமைச்சர் பதவி என்பது, என்னைப் பொறுத்தவரையில் நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ‘பதவியைப் பதவியாகப் பார்க்காதே – பதவியைப் பொறுப்பாகப் பார்; அப்போதுதான் பொறுப்போடு பணியாற்ற முடியும்’ என்று அடிக்கடி எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ஆகவேதான், அதைப் பொறுப்போடு, நான் அதைப் பொறுப்பாகக் கருதி, பொறுப்பை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
இந்த இடத்திலே முதலமைச்சராக இருந்து, ஆட்சியை நடத்தி, சமுதாயத்திற்காக, இந்த நாட்டிற்காக உழைத்திருக்கக்கூடிய பெருந்தலைவர்காமராசர் அவர்களாக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாக இருந்தாலும், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும், கலைஞர் அவர்களுடைய இனிய நண்பராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களாக இருந்தாலும், அவர்களெல்லாம் ஆற்றியிருக்கக்கூடிய அந்தப் பணிகளை நான் ஒருக்காலும் மறந்திடமாட்டேன். ஆகவே, அவர்கள் வழிநின்று என்றைக்கும் நான் என்னுடைய கடமையை ஆற்றுவேன்; ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ‘உங்களில் ஒருவனாக’இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, வாழ்த்திய அத்தனை பேருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி, நன்றி, நன்றி!