U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்தும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து,190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இறுதியில்,47.4 ஓவர் முடிவிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 195 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி 5 வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே,இந்தியா 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில்,தற்போது 5 வது முறையாக மீண்டும் உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நமது இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ICC U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். போட்டியின் மூலம் அவர்கள் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.