வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது. அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் வலிமையற்ற அரசாக அஇஅதிமுக செயல்பட்டது என்று குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சியில், குறிப்பாக செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிகாரத்தில் இருந்தவர்கள் சுயநல ஆதாயம் தேடுவதில் குறியாக இருந்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கை உறுதி செய்துள்ளது. மாண்பமை சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது கடுமையான அத்துமீறலாகும். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை கடன் திருப்பிச் செலுத்தும் சக்தியற்றவைகளாக பலவீனப்படுத்தியுள்ளது. அரசியல் உறுதியும், நிர்வாகத் திறனும் இல்லாத அஇஅதிமுக ஆட்சியின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்த நெருக்கடிக்கு காரணமாகும் என நிதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என உறுதியளித்த நிதியமைச்சர் அதற்கான திட்டங்களை அடுத்து வரும் 2021 – 22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முன்வைப்போம் என்று கூறியிருக்கிறார். அரசு நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையோடும், மக்கள் ஆதரவோடும் நடத்தும் நல்ல நோக்கத்தோடு வெள்ளையறிக்கை வெளியிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
தங்களன்புள்ள,

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு