சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, பொதுத் தளத்தில் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியது. கோகுல்ராஜ் உடன் பயின்ற மாணவியிடம் நேசமுடன் பழகியதை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறிக் கும்பல் ஆணவப்  படுகொலையை அரங்கேற்றி, சமூகத்தை அச்சுறுத்தி, ஆதிக்கம் செலுத்த முனைந்தது. கோகுல்ராஜ் ஆணவக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த, மதுரை  பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்  குற்றவாளிகளுக்கு வரலாறு காணாத கடும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
கோகுல்ராஜ் மரணத்துக்கு காரணமான சுவாதி பிறழ் சாட்சியானதும், உயர் நீதிமன்றம் சட்ட நெறிமுறைகளில் நின்று வழங்கப்படும் நீதியை விட மேலானது சமூகத்தில் எதுவும் இல்லை, மனசாட்சிக்கு எதிராக பேசுவது கூடாது  என்று எடுத்துக் கூறியும், அவர் நீதிமன்ற அவமதிப்பை  சந்திக்க துணிந்தார் என்பது சமூகத்தில் நிலவி வரும்  சாதிவெறியர்களின் ஆதிக்கத்தை துல்லியமாக வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் ஆணவக் கொலை குற்றத்தில் முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த  மேல்முறை வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு இன்று (02.06.2023) குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதில் பிழை காண முடியாது என உறுதி செய்து, குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் ஊடகங்களை பயன்படுத்த முயற்சித்தமைக்கு இரையாகமல்  ஊடகத்தின்  நீதியை நிலைநாட்ட, உதவியது ஊடகங்களின முதிர்ச்சியை பாராட்டியுள்ளது.
சாதிவெறி பிடித்து, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வெறி பிடித்து அலையும் பிற்போக்கு சக்திகளுக்கு கடிவாளம் போட்டு, கட்டுப்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இந்த வழக்கில் ஆரம்பம் முதல் இறுதி வரை விழிப்போடு கண்காணித்து வாதடி, நீதியை நிலைநாட்ட உதவிய வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், சங்கரசுப்பு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.