பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம்  செப்டம்பர் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் தமிழ் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை இரண்டாக பிரித்து கட்டணங்களை உயர்த்தி வருகின்றது. இது சாலை வழியாக பயணம் செய்வோர் மீது நடத்தப்படும் சட்டபூர்வ பகல் கொள்ளையாகும்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டுதல், இயக்குதல், திரும்ப ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் இன்னும் பல இடங்களில் மேம்பாலங்கள்  அமைக்கப்படவில்லை. பல ஊர்களுக்கான சேவை சாலைகள் போடப்படவில்லை. இந்த நிலையில் முன்னர் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளன. பழுது பார்த்தல் என்ற பெயரில் வழிமாற்றம் செய்யப்பட்டு, சாலை வழிப் பயணிகள் பல மாதங்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் எரிபொருள் செலவும், வாகன தேய்மான செலவும் அதிகரிக்கின்றன. பாஸ்ட்டேரேக் – முறையில் முன் பணம் கட்டாதவர்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பது பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலாகும். இது, சில்லறை வியாபாரத்துக்கும், மொத்தக் கொள்முதல் வணிகத்திலும் நடைபெறும் பொருள் போக்குவரத்து வாகனங்கள் பெரும் தொகை கட்டணமாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். இவைகளை எதனையும் கருத்தில் கொள்ளாது, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்திய பாஜக ஒன்றிய அரசின்  மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், சுங்க கட்டண முறைக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டமைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.