துணை வேந்தர் நியமனத்தில் மாநில உரிமை பறிப்புக்கு கண்டனம் – முத்தரசன்

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தேர்வுக் குழு அமைப்பதற்காக பல்கலைக் கழக மானியக்குழு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவு மாநில அரசின் உரிமைகளை வேரடி நுனி வரை சென்று,  அடியோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையாகும். ஐந்து உறுப்பினர்களை கொண்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதி அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை நிலை எடுத்து  ஆளுநருக்கு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவை நிராகரித்த ஆளுநர் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மத்திய பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியை நியமித்து முரண்பட்ட நிலையை மேற்கொண்டுள்ளார். ஆளுநரின் தலையீட்டை தடுத்து, மாநில உரிமையினை நிலைநாட்டும் முறையில் புதிய  துணை வேந்தர் தேர்வுக் குழுவை அமைத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள பல்கலைக் கழகம் “இனி துணை வேந்தர் தேர்வுக்குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் துணை வேந்தர் தேர்வுக் குழுவின் தலைவராக ஆளுநர் நியமிப்பவரும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்பவர்  உறுப்பினர்களாகவும்  இருப்பார்கள் என புதிய விதி மூலம் நிபந்தனை விதித்துள்ளது. இத்துடன் துணை வேந்தர்களாக கல்வியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பிற துறை சார்ந்த வல்லுநர்களையும், பொதுத்துறையை சார்ந்தவர்களையும் துணை வேந்தர்களாக  நியமிக்கலாம் என  புதிய விதிகளையும் சேர்த்துள்ளது.  இது உயர் கல்விக் துறையை பேரழிவுக்கு கொண்டு செல்லும் அபாயகரமானது. பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைவேந்தர் தேர்வுக் குழு தொடர்பான புதிய உத்தரவு மாநில மக்களின் உணர்வுகளை நிராகரித்து, உரிமைகளை வேரடி நுனி வரை பிடுங்கி எடுத்துக் கொள்ளும் ஏதேச்சதிகார நடவடிக்கையை  வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசும், மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை நேரடியாக உயர்கல்வியில் திணிக்கும் செயலுக்கு வழி வகுத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அலட்சியப் படுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதுடன் பல்கலைக் கழக மானியக் குழுவின் அதிகாரப் பறிப்பு உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.