மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

மதுரை  சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சாதி வெறிக்கு கடும் எச்சரிக்கை. கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு:
பொறியில் கல்லூரியில் பயின்று வந்த ஓமலூர் கோகுல்ராஜ் – நாமக்கல் சுவாதி இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகிவந்தனர். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி இருவரும் சேர்ந்து  திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்களது நட்பை விரும்பாத சாதி வெறியர்கள் கும்பலாக சேர்ந்து 23.06.2015 ஆம் தேதி கோகுல்ராஜை கடந்தி சென்று‘ கொடூரமாக கொலை செய்து, பள்ளிபாளையம் அருகில் தொடர்வண்டி பாதையில்  துண்டிக்கப்பட்ட கோகுல்ராஜுவின் உடலை வீசி எறிந்துள்ளனர்.
சட்டத்தின் ஆட்சிக்கும், சமூக வாழ்வுக்கும் பேரதிர்ச்சி அளித்த இந்தக் கொடூர சாதி வெறிக் கும்பலின் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப் பிரியா 2015 செப்டம்பர் 18 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக கோகுல்ராஜின் தாயார் வி.சித்ரா, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை சேலம் அல்லது ஈரோடு மாவட்ட நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றுக்கு மாற்றும்படி உயர்நீதிமன்றத்தை அணுகினார். கோகுல்ராஜ் கொலை  வழக்கை மதுரை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குயினர் வன்கொடுமை தடுப்பு வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கிடையில் சிறையில் இருந்த யுவராஜ் தனக்கு பிணை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இவரது வழக்கின் தன்மை அறிந்த உச்சநீதி மன்றம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன் “பிணை கேட்பு மனுவை”  தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் அனைத்தும் பிறழ்சாட்சியானது பேரவலமாகும். இருப்பினும் வழக்கில் தொடர்புடைய ஆவண சாட்சியங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் கூர்ந்து ஆய்ந்தும், பகுப்பாய்வு செய்தும் மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றங்களை உறுதி செய்து  குற்றவாளிகளை அடையாளப்படுத்தி    அறிவித்துள்ள மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, சாதி வெறி சக்திகளுக்கு மீண்டும் ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி   வரவேற்கிறது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குற்றங்களை குறைக்கும் கடும் நடவடிக்கையாக அமைய வேண்டும் என  நாடு எதிர்பார்க்கிறது. கோகுல்ராஜு வின் கொடூர கொலை வழக்கு தொடர்பான ஆவண சாட்சியங்களை மிகப் பொருத்தமாக எடுத்துக் கூறி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது  என்பதில் கூடுதல் முனைப்புக் காட்டி வழக்காடியுள்ள அரசின் கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த வழக்கில் தொடர்புள்ள ஒருவர் தப்பித்து, தலைமறைவாகி விட்டதாக கூறியிருப்பது காவல்துறையின் பணி மீதான விமர்சனமாகும். அவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கு சாதிவெறி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை  திரும்ப, திருப்ப வலியுறுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சாதிவெறி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.