ஆளுநரின் எதிர்கட்சி அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நேற்று (05.06.2023) பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டை தொடக்கி வைத்துபேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாடுஅரசு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதற்கு இடையூறு செய்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்கதக்கதல்ல. அத்துடன், “நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்கு சென்று பேசுவதாலோமட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்என்று பேசியுள்ளார்.

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழ்நாட்டில் நடத்தப்படும் சர்வதேச முதலீட்டார்கள் மாநாட்டிற்கு நேரில் அழைத்ததுடன், அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும்பியுள்ள நிலையில்ஆளுநர் கூறிய கருத்து முதலமைச்சரின் அரசுமுறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம்கொண்டதாகும். மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிதிகளிடம் தான் இருக்கிறது. ஆளுநர்களிடம் இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவாகவரையறுத்து உத்தரவிட்ட பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறலாகதொடர்வதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்கண்டிக்கிறது.