“குட் பேட் அக்லி” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவிஸ் நவீன் எர்னேனி, ரவிசங்கர்  தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், பிரியா வாரியார், ஜாக்கி ஷரோப், உஷா உதூப், கிங்ஸ்லி, யோகிபாபு, உள்பட  பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “குட் பேட் அக்லி”. ஆரம்பத்தில் அஜித்குமார் மிகப்பெரிய ரவுடிசம் செய்யும் தாதாவாக இருக்கிறார். அவரது மனைவி திரிஷா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை அஜித்குமார் பார்க்கக்கூடாது என்று மனைவி திரிஷா தடைவிதிக்கிறார். ரவுடிசத்தை விட்டுவிட்டு நல்ல மனிதராக திருந்தி வந்தால்தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று திரிஷா கூறுகிறார். இதை ஏற்றுக் கொண்டு அஜித்குமார் தனது ரவுடிசத்தை விட்டுவிட தீர்மானித்து காவல் நிலையத்தில் தான் செய்த ரவுடிசத்திற்காக சரண்டர் ஆகிறார். நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கிறது. 18 ஆண்டுகள் சிறை தண்டணை முடிந்து மகனைப் பார்க்க ஆவலுடன் வெளியே வருகிறார் அஜித்குமார். ஆனால் அதே நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அஜித்குமாரின் மகனை ஒரு பொய்யான வழக்கில் சிக்கவைக்கப்படுகிறார். தனது மகனை பொய்யான வழக்கில் எதற்காக சிக்கவைக்கப்படுகிறார்?  யார் சிக்கவைத்தது? மகனை காப்பாற்ற அஜித்குமார் என்ன  முடிவை எடுத்தார்? என்பதுதான் கதை. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உண்மையாகவே அஜித்குமாரின் அதிதீவிர ரசிகர் ஆவார். விடா முயற்சி படத்தின் தோல்வியால் அஜித்குமாரின் ரசிகர்கள் சோர்வடைந்து கிடந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் எழ வைப்பதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளார் அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன். காட்சிக்கு காட்சி அஜித்குமாரை தூக்கி நிறுத்தும் வசனங்களும் அவர் நடித்து வெளிவந்த பழைய படங்களின் குறியீடுகளும் படம் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அதிகளவு இனிப்பை ரசிகர்களுக்கு ஊட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அது மற்றவற்களுக்கு தெவிட்டிவிடும் என்பதை மறந்துவிட்டார். ஜி.வி.பிரகாஷின் இசையும், அர்ஜூன் தாஸ்சின் துடிப்பான நடிப்பும் படத்துக்கு பக்கபலமாக உதவி இருக்கிறது. “குட் பேட் அக்லி” முழுக்க முழுக்க அஜித்குமாரின் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம்.