இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம்

இந்திய நாடே கோலாகலமாக கொண்டாடும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கும் மக்கள் நம் தேசியக் கோடியை ஏற்றுவதும், சிறிய வடிவ கொடியை சட்டையில் குத்திக்கொண்டும் வலம் வருவார்கள். வீதியெங்கும் இந்திய கொடி விற்கப்படும் இந்நேரத்தில், மூவர்ண இந்திய கொடியை தயாரிக்கும் ஒரே இடத்தை பற்றி தெரிந்து கொள்வோம். ஆம், இந்திய தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக நம் நாட்டில் தயாரிக்கும் ஒரே ஒரு ஃபாக்டரி மட்டுமே உள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி என்ற கிராமத்தில் உள்ள ’கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ (KKGSS) என்ற இடத்தில் அமைத்துள்ள தொழிற்சாலையில் மட்டுமே இந்திய கொடிகள் உற்பத்தி ஆகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்திய நாட்டின் பாரம்பரிய சின்னமான மூவர்ணக் கொடியை தயாரிப்பதில் தங்களின் வாழ்நாளை அளித்துள்ளனர். இப்பெண்கள் சாதி, மத பேதமின்றி ஒரே சிந்தனையுடன், நாட்டின் மீதான பற்றுடன் இப்பணியை பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். ’கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ பின்னணி

KKGSS நவம்பர் மாதம் 1-ம் தேதி, 1957ல் காந்திய சிந்தனை கொண்ட ஒரு குழுவால் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும். இங்கு காதி மற்றும் கிராம தொழிற்சாலைகளின் உற்பத்திகள் செய்யப்பட்டன. வெங்கடேஷ் டி மகடி மற்றும் ஸ்ரீரங்கா காமத் ஆகியோர் முதல் தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பின்னர் இந்த அமைப்பு, கர்நாடகாவில் உள்ள 58 அமைப்புகளுடன் இணைந்து KKGSS மற்றும் அதற்கான ஒரு கூட்டமைப்பை ஹூப்ளியை தலைமியிடமாகக் கொண்டு தொடங்கியது. தலைமை அலுவலகம் 17 ஏக்கர் நிலப்பரப்ப்பளவில் ஒரு உற்பத்தி ஆலை, துணி உற்பத்தி குறித்தான கல்லூரியுடன் இயங்குகிறது. 1982-ல் இருந்து காதி உற்பத்தியை இந்த ஆலை செய்து வந்தாலும், நாட்டின் தேசியக் கொடி உற்பத்தி 2004ல் தொடங்கியது.

KKGSS-ன் நிறுவனர்கள், தேசியக்கொடி தயாரிப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகம் வாழும் இடமான அங்கு, நடைப்பெற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். “அதன் படி, இன்று சுமார் 100 பின்னலாடை மற்றும் நெசவுத்தொழில் செய்யும் வல்லுனர்கள் இந்திய தேசியக்கொடியை அங்கே உற்பத்தி செய்கின்றனர்,” என்று KKGSSன் மேலாளர் நாகவேனி கால்வாட் தெரிவித்தார்.  10,500 ரூபாய் முதலீட்டில் தொடக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, தற்போது ஒரு ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தேசியக்கொடிகளை தயாரிக்கின்றார்கள்
இந்திய தேசியக் கொடி ஏன் ஒரே இடத்தில் தயாரிக்கப் படுகிறதென்றால், நாட்டில் KKGSS மட்டுமே இந்திய தேசயக் கொடிகளை உற்பத்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இடம். பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS)  அமைப்பின் படி, சரியான அளவில், சரியான வடிவில் தேசியக்கொடியை இவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும்.

ஜீன்ஸ் துணியை விட அதிக அடர்த்தியான ஒருவகை துணியில் மட்டுமே கொடிகளை இம்மையம் தயாரிக்கிறது. இவர்களது நெசவுப்பிரிவு பகல்கோட்டில் உள்ளது. மூன்று லாட்களில் கொடிகள், மூவர்ணத்தில் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக டை செய்யும். பின்னர் துணி சரியான அளவில், வடிவில் வெட்டப்பட்டு, நடுவில் நீல நிறத்தில் அசோக சக்கரம் அச்சடிக்கப்படும். கடைசியாக மூன்று வர்ண துணிகள் சேர்த்து தைக்கப்பட்டு ஒரே இந்திய கொடியாக தயாரிக்கப்படும். KKGSS-ல் 60 தையல் மெஷின்கள் உள்ளது. ஒரே மாதிரியாக இங்கே தைக்கப்படும். ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படும். கொடியின் அகலமும், நீளமும், சரியாக 2:3 என்ற அடிப்படையில், இருப்பக்கமும் நீல நிற சக்கரம் அச்சிடப்படும். BIS ஒவ்வொரு லாட்டையும் சரிபார்த்த பின்னரே ஒப்புதல் அளிக்கிறது. ஒரு சிறிய தவறு இருப்பினும் அந்த கொடி அடங்கிய லாட் நிராகரிக்கப்படும். ஆனால் இத்தனை கடுமையான முறைகள் இருந்தும், ஆண்டில் 10% மட்டுமே நிராகரிக்கப்படுகிறது. தேசியக்கொடி 9 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. சிறியது 6×4 இன்ச்களிலும், பெரியது 21X14 அடியிலும் செய்யப்படுகிறது. கடுமையான கண்காணிப்பு இருப்பதால், கொடி உற்பத்தியில் இருக்கும் அதே குழுவினர் பல ஆண்டுகளாக அதே பணியை செய்து வருகின்றனர்.