“எமகாதகி” திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான பேய் படமாக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் பேசியதாவது:  “நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு என் நன்றி. இப்படத்திற்காக உழைத்திட்ட இயக்குநர், நடிகர்கள்,, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பெப்பின் ஜார்ஜ் மிகத் திறமையானவர். இப்படத்தில் அவரது திறமையை நிரூபித்துள்ளார்.  அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைத்து ரசிகர்களும் எங்களது இப்படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.********

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசியதாவது:  “எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு.  இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம்  சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.  ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம்  இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார்.  இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர்  தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி.  சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி.  உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் நன்றி” என்றார்..