தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்- எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தின் 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தின் நிதிநிலைக்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் பலனடையும் வகையில் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3-க்கு குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் தேர்தல் வாக்குறுதிபடி டீசல் விலை குறைப்பையும், 100 ரூபாய் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பையும் கவனத்தில் கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மின்சார பயன்பாட்டுக்கான மாதாந்திர கணக்கீடு முறை அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெறாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் அரசு இருக்கிறது என பட்ஜெட் உரையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்மறை எண்ணத்தை முன்கூட்டி குறைக்கவே பட்ஜெட்டுக்கு முன்னதாக தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. அரசின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான தனி கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மகளிர் பயன்பெறும் வகையில்  மகளிருக்கான பேறுகால விடுமுறை அதிகரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி  அறிவிப்பு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்கள் மற்றும் ஊதியம் அதிகரிப்பு போன்றவை வரவேற்கத்தக்கது.

மேலும், தொழில்நிதி உதவி திட்டத்தின் கீழ் 7,000 சிறுபான்மையினர் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், பயனாளர்களின் எண்ணிக்கையை அரசு மேலும் அதிகரித்திருக்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய காரணமான சிறுபான்மை சமூக மக்கள் பயன்பெறும் வகையிலான குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மொத்தத்தில் தமிழக பட்ஜெட் மகிழ்ச்சியும்,  ஏமாற்றமும் கலந்த அறிவிப்பாக உள்ளது. பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வெறும் அறிவிப்புடன் நின்றுவிடாமல் அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்