ஜனவரி 13, 17 ஆகிய தேதிகளையும் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!  – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது;

தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாக உள்ளன.  இந்த விடுமுறை தினத்துக்கு முந்தைய ஜனவரி 13 திங்கட்கிழமை மற்றும் விடுமுறைக்கு பிந்தைய ஜனவரி 17 வெள்ளிக்கிழமை வேலை நாட்களாக உள்ளன. ஆகவே, ஜனவரி 13 மற்றும் 17  ஆகிய இரண்டு தினங்களையும் சேர்த்து தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆண்டு விடுமுறை பட்டியலில் ஜனவரி 11 முதல் 19 வரை விடுமுறையாக உள்ளது. அதனடிப்படையில் ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.  

தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுக்காக வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய நாட்களையும்  விடுமுறை நாளாக அறிவிக்கும் போது, மக்கள் முன்கூட்டியே தங்கள் பயணங்களை எளிய முறையில் திட்டமிட்டு தமிழர் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி சிரமமின்றி மீண்டும் ஊர் திரும்புவார்கள். தொடர் விடுமுறை கிடைப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். குறிப்பாக வெளியூர்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அது வசதியாக இருக்கும்.

ஆகவே,  ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளையும் தமிழக அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.