தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென  திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர் உள்ளனர். இவர்களில் இலங்கையை சேர்ந்த 78 தமிழர்கள், பொய் வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து வழக்குகளில் விடுதலை பெற்ற பிறகும், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும். சிறப்பு முகாமில் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி 10 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து மற்றவர்களும் தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 11ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். மேலும், ஒருவர் கழுத்தை அறுத்தும், மற்றொருவர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் முதல் சிறப்பு முகாமில் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழர்களிடம், விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து போராட்டத்தை அதிகாரிகள் கைவிட செய்தனர். ஆனால் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிக்கான நாட்கள் கடந்துவிட்ட நிலையில், விடுதலைக்கான எந்த விதமான முன்னெடுப்புகளும் எடுக்கப்படாத நிலையில் தான், தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்ட நிலைக்கு சிறப்பு முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து, தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து  வைக்கப்பட்டுள்ள அனைவரையும்  விடுதலை செய்து, அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே கரீம்