செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் முதல்கட்டமாக 24 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் கடந்த ஏப்ரல் 01ம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 23 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  இதனால் பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் பாரதூரமான விளைவுகள் எதனையும் பற்றி சிறிதும் சிந்திக்காமல் வணிக நோக்கோடு தனது பார்வையை செலுத்தியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா முடக்கம் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கும். இதனால்  பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான சுங்க சாவடிகளில்  முறையான சாலை பராமரிப்பு இல்லாமலும்,  சாலை உபயோகிப்பாளர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் தான் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதனை  தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பது இல்லை. அதேவேளையில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு வருகின்றது.

மேலும் வாகனங்கள் அதிகமாகும் பொழுது அதன் அடிப்படையில் கணக்கிட்டு சுங்க கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்ற சுங்க சாவடிகளுக்கான நிபந்தனையும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.

நெடுஞ்சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், பராமரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகியன சுங்க கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்? காலக்கெடு என்ன? என்பதற்கான எந்த வரையறையுமின்றி சுங்கக் கட்டணம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை வரைமுறையின்றி நாடு முழுவதும் தொடர்கிறது.

ஏற்கனவே விற்பனை வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றால் திண்டாட்டத்தில் இருக்க, இந்த சுங்கக் கட்டண உயர்வு உள்ளூர் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தாக்கம் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, மக்களின் வாங்கும் சக்தி குறையவும் வழிவகுக்கும். விற்பனை மந்தம் காரணமாகவே நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்கும் வகையிலான இதுபோன்ற சுங்கக் கட்டண உயர்வுகளை அரசு தவிர்க்க வேண்டும்.

ஆகவே, சுங்கக் சாவடி கட்டண வசூலிப்பை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடமிருந்து விடுத்து அரசே ஏற்று நடத்தி சுங்கச்சாவடி இல்லாத சாலையாக நெடுஞ்சாலைகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தமிழக சுங்கச் சாவடிகளில்  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்