இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் போன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவித்தனர். வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்களை ரத்து செய்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் போராடியும் வந்த நிலையில், கடந்த 2020ல் காவிரி டெல்டா மாவட்டங்களை ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’ அறிவித்து தமிழக சட்டமன்றத்திலும் சட்டமுன்வடிவை கொண்டுவந்து கடந்த அதிமுக அரசு நிறைவேற்றியது. இதையடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவிற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மண்டலத்தில், பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையை பெறுவதற்காக, தமிழக அரசின் கீழ் செயல்படும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (MTIPB) ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இன்னும் 45 மாதங்களில் நிறைவடையவுள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றி சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பிலும், பெரு நிறுவனங்களின் சார்பிலும் பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களை அமைப்பது தான் பெட்ரோ-கெமிக்கல் மண்டலத் திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் 2020இல், தடைசெய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோகெமிக்கல் தொழில்கள் இல்லை என்பதால், இத்திட்டத்தை நாகையில் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெட்ரோலியம், எரிவாயு சார்ந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் பெரும் போராட்டங்களின் மூலம் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக கடந்த அரசு இயற்றிய சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான தமிழக அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது.
ஒரு மக்கள் நலன் விரும்பும் அரசானது எந்த நோக்கத்திற்காக இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்டதோ அதனை பரிபூரணமாக செயல்படுத்த வேண்டும். மேலும், அந்த சட்டத்தில் உள்ள ஒட்டைகள் வழியாக எவ்வித நச்சு ஆலைகளையும் அந்த பகுதியில் நுழைந்து விடாதபடி, சட்டத்தின் விதிகளை பலப்படுத்த வேண்டும். மாறாக அந்த ஓட்டையை பயன்படுத்தி சட்டத்தை நீர்த்துபோகச் செய்து விடக்கூடாது.
கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக இருந்த போது இந்த சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளை சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி, சட்டத்தை வலுவானதாக அமைக்க வேண்டும் என்று அக்கறையுடன் சுட்டிக்காட்டிய திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் சுட்டிக்காட்டிய ஓட்டையின் வழியாகவே வேளாண் மண்டலத்தை பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஆகவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும், காவிரிப்படுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பரப்பு முழுவதையும் அந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.கரீம்
மாநில செயலாளர்