தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், ஆளுநர் பதவிக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கும் வகையில், இந்துத்துவ சனாதனத்தை பரப்பும் பணிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் கூட்டாட்சி முறைக்கு மாற்றமாக இருப்பதோடு மட்டுமின்றி, அவரின் செயல்பாடுகள் சனாதன ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் முகவராகவும், ஊதுகுழலாகவும் உள்ளது.

மக்களுக்கான நலத்திட்ட மசோதாக்களை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடுவது மட்டுமின்றி, கல்வியில் சமூகநீதியை சீர்குலைத்து குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை சக்தியாய் வலம்வருவது, பாசிச இந்துத்துவ சித்தாந்த கொள்கைப் பிரச்சாரங்களை மேடையேற்றுவது போன்றவற்றை தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொண்டு வருகின்றார். சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகையில் நடத்தியது முதற்கொண்டு, ஆளுநர் பதவியை முழு நேர இந்துத்துவ நிகழ்ச்சி நிரலாகவே மாற்றி அமைத்து அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி   செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் சென்னை ஸ்ரீராம் சமாஜத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர்கள், நாடு ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார். அதேபோல், மக்கள் வரிப்பணத்தில் இயங்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் நடத்திய சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராமர் கோயில் கட்டுவது சவாலாக இருந்தது என்றும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்துக்கள் அதிக துன்பங்களை அனுபவித்துள்ளதாக  தெரிவித்தார். கடந்த குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூட, அனைவரின் உள்ளத்திலும் ராமன் குடி கொண்டுள்ளார் என  தமிழக கலாச்சாரத்தில் இல்லாத விசயத்தை குறிப்பிட்டார். தற்போது சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தின் ஒளியால் தான் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இப்படியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் நிகழ்ச்சி நிரல்கள் பெரும்பாலும் தமிழக கலாச்சாரத்தில் இல்லாத சனாதன ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவத்தின் தொடர்புடையதாகவே உள்ளது.

ஒரு குடிமகன் என்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எந்த விசயத்திலும் தனது கருத்துக்களை தெரிவிக்கவும், அவர் விரும்பும் யாரையும் மகிழ்விக்கவும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அரசியல், மத, சாதி, மொழி, பாலின ரீதியான பாரபட்சமற்ற நிலையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அரசியல் சாசன பதவியை தான் வகிப்பதையும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே தனது விசுவாசமும், உறுதிப்பாடும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் மறந்து விட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருந்துகொண்டு, அதற்கெதிராகவே தமிழக ஆளுநர் செயல்படுகின்றார். எனவே ஆளுநராக இருக்கும் தகுதியை ஆர்.என்.ரவி  இழந்துவிட்டார். ஆகவே, ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை ஆர்.எஸ்.எஸ்ஸின் முகவராக தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை கெடுப்பதை விட, தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்ததாக இருக்கும். தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.