“சார்” திரைப்பட விமர்சனம்

நிலோபர் சிராஜ் தயாரிப்பில் நடிகர் போஸ்வெங்கட் இயக்கத்தில் விமல், சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சார்”. ஒரு கிராமத்தில் சரவணனின் அப்பா ஆரம்ப பாடசாலை ஆசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றபின் மனநலம் பாதித்து இறந்துவிடுகிறார். சரவணன் அந்த ஆரம்ப பாடசாலையை நடுநிலை பாடசாலையாக மாற்றி அவரது தந்தையைப் போலவே பணி ஓய்வு பெற்று மனநலம் பாதித்த நிலைக்கு தள்ளப்பட்டு இறந்து விடுகிறார். சரவணனின் மகன் விமலும் அதே பாடசாலைக்கு ஆசிரியர் பணிக்கு சேர்ந்து அந்த நடுநிலை பாடசாலையை மேல்நிலை பாடசாலையாக உயர்த்த பாடுபடுகிறார்.  அதற்கு அவ்வூர் மேல்வர்க்கத்தினர் பெரும் தடையாக பல சூழ்ச்சிகள் செய்கிறார்கள். அந்தசூழ்ச்சிகளை விமல் முறியடித்தாரா?. தாத்தா, அப்பா பிறகு தானும் எப்படி மனநலம் பாதிதவர்கள் போல் ஆக்கப் படுகிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களை அடக்கியாளும் மேல்வர்க்கத்தினர் கதி என்ன ஆனது? என்பதை வெள்ளித்திரையின் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் நடிகரும் இயக்குநருமான போஸ்வெங்கட்.  பாமரர்கள் படிப்புறிவு பெற்றுவிட்டால் தங்களுக்கு அடிமைத் தொழில் செய்ய ஆள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று மேல்வர்க்கத்தினரின் நரித்தனத்தை அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குநர் போஸ்வெங்கட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு பொருளுதவி செய்த தயாரிப்பாளரும் போற்றதலுக்குறியவர்தான். விமல் படத்துக்குப் படம் பரிணாம வளர்ச்சி பெற்று நடித்து வருகிறார். அப்பா இறந்து கிடப்பதைப் பார்த்து ஒரு ஆண்மகன் எப்படி மனங்கலங்குவான் என்பதை தத்ரூபமாக நடித்துக்காட்டியிருக்கிறார் சரவணன். சரவணனின் உடலுக்குள் நடிப்பின் இலக்கணம் தொனிக்கிறது. சரவணன் இறந்து கிடக்கும் காட்சியில் ரமாவின் நடிப்பு அபாரம். குனிந்தவன் நிமிர உச்சக்கட்ட காட்சி உணர்த்துகிறது.  மொத்தத்தில் ஒடுக்கப்பட்டோரை மிதிக்கும் கால்கள் எப்போது ஊனமாகும்? எனறு எண்ணத் தோன்றும். “சபாஷ் போஸ் வெங்கட்”.