இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிளடி பெக்கர்”. மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்கிறார் கவின். அவருடன் இருக்கும் அனாதை சிறுவன் ஒருவன், காரில் வருபவர்களிடம் புத்தகம் பேனா விற்று காசு சேர்க்கிறான். இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில் கவின் ஒரு அரண்மனைக்குள் சென்று திருட ஆரம்பிக்கிறார். அந்த அரண்மனைக்கு சொந்தக்காரரான ரெடின் கிங்ஸ்லியை, அவரின் உறவினர்கள் அரண்மனை சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலைகார கும்பல் திருடச் சென்ற கவினை, ரெடின் கிங்ஸ்லியாக நடிக்க வைத்து அந்த அரண்மனையை தங்களது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில் ரெடின் கிங்ஸ்லியின் ஆவி கவின் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது. சொத்து தங்களுக்கு கிடைத்ததும் கவினையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதை அறிந்த ரெடின் கிங்ஸ்லியின் ஆவி கவினை காப்பாற்ற அரண்மனையை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறது. கவின் வெளியே வந்ததும் கார் செட்டில் இருக்கும் ஒரு காரை பார்கிறார். அந்த காரை பார்த்ததும் மீண்டும் அரண்மனைக்குள்ளேயே கவின் சென்று விடுகிறார். ஏன் மீண்டுக் அரண்மனைக்குள் சென்றார்?. அந்த காருக்கும் கவினுக்கும் என்ன தொடர்பு?. தான் எடுத்து வளர்த்து வரும் அந்த அனாதை சிறுவன் யார்?. என்பதுதான் மீதிக்கதை. பிச்சைக்காரன் வேடத்திற்கு மிகவும் பொறுத்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார் கவின். ரெடின் கிங்ஸ்லியின் உரத்த குரல் ஆவியின் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக நடித்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. உச்சக்கட்ட காட்சியில் கவினின் வாழ்க்கை மர்ம முடிச்சுகளை சிக்கல் இல்லாமல் அவிழ்த்திருக்கிறார் இயக்குநர் சிவபாலன். இசை இரைச்சலாக இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளது.