கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் பேசுவது அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும் செயலாகும். ஒரு மாநில மக்களை மற்றொரு மாநில மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு பகை ஏற்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.

கூட்டாட்சி கோட்பாட்டையும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளையும் சிதைக்கும் செயலாகும். கர்நாடக முதலமைச்சரின் அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி தலையிட்டு தடுத்து, மேகதாது பகுதியில் தடுப்பு அணை கட்டுவதை நிரந்தரமாக கைவிடச் செய்ய வேண்டும். இதில் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு ஒன்றுபட்டு போராடும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தமிழக இ.கயூனிஸ்ட்டு செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.