பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு

தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் திட்டப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இன்று (20.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மனிதக்கழிவினை மனிதன் அகற்றும் அவல நிலையினை மாற்ற முன்மாதிரியாக சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் பணியினை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ​மேலும், சிதிலமடைந்த நிலையில் கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் உள்ள 302 குடியிருப்புகளையும், காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் உள்ள 84 குடியிருப்புகளையும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் திட்டப்பகுதியில் உள்ள 256 குடியிருப்புகளையும் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் உள்ள 136 குடியிருப்புகளையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி மக்கள் பயன் பெறும் வகையில் வாகன
நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன், ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, உறங்கும் அறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிவறை, மின்தூக்கி, ஜெனரேட்டர் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய புதிய குடியிருப்புகளை கட்டித்தர அமைச்சர்  அறிவுறுத்தினார். தெற்கு கூவம் ஆற்றுச்சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையினை பரிசீலித்து நிரந்தரமான மாற்றுக்குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். ​இந்த ஆய்வின் போது வாரிய தலைமைப்பொறியாளர்  இராம.சேதுபதி, கண்காணிப்பு பொறியாளர்
அ.செல்வமணி, நிர்வாகப்பொறியாளர்  சி.சுடலை முத்துகுமார் உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.