ஆலயங்கள் திறக்க 25 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை தெய்வத்திடும் முறையிடவே ஆலயங்கள் உள்ளன. இந்நிலையில் கொரோனா பெருந்தோற்றால் உறவினர்களை இழந்தவர்கள், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து இன்னல்களுக்கு ஆளானவர்கள், பெருந்தொற்றால் மன சங்கடத்திற்கு ஆளான மக்கள் தெய்வத்திடம் முறையிட்டு ஆறுதல் தேடுவார்கள். இவ்வாறு தெய்வ வழிபாடு, மன ஆறுதலை தருவதோடு, நோயை எதிர்த்து வெற்றி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்ம பலம், மனபலம் ஏற்படுத்தும். ஆகவே வழிபாடு அவசியமாகிறது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் மக்கள் வரிசையாக சமூக இடைவெளியோடு சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் கொரோனா நோய் தொற்று குறைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் தரிசனத்திற்கு திறக்க வேண்டும் என்று பக்தர்கள் பலரும் கேட்கிறார்கள்.
எனவே அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து ஆலயங்களின் முன்பாக கற்பூரம் ஏத்தி வழிபடும் போராட்டத்தை வரும் 25.6.2021அன்று (வெள்ளிக்கிழமை) இந்து முன்னணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு அவரவர் பகுதியில் உள்ள ஆலயத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி, நமது ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இதன் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஆன்மிக அமைப்புகள், வழிபாட்டு மன்றங்கள் முதலானவை ஆதரவு தெரிவிக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு, பக்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உடனடியாக ஆலயங்களை தரிசனத்திற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்