நாட்டின் நலன்களைக் காயப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளைக் கண்டறியுமாறு ஆராய்ச்சி சமூகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டைப் பார்வையிட்ட பின் பேசிய அவர், தீவிரவாதம், மனித சமூகத்தின் எதிரியாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார். ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில், தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தீவிரவாதம் சம்பந்தமான துறைகளிலும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.முன்னதாக, இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீட்டுத் திட்டத்தை இணைந்து உருவாக்கிய சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் புதிய நிறுவனமான (ஸ்டார்ட் அப்) த்வஸ்தா மேனுஃபாக்சரிங் சொல்யூஷன்ஸ் குழுவினரின் முயற்சிகளை திரு நாயுடு வெகுவாகப் பாராட்டினார். தொழில்நுட்பத்தின் மேம்பாட்டு உரிமைகளை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், வணிகரீதியான நம்பகத்தன்மையை அடையவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவும், தொழில்துறை-நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதிநவீன தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், சாமானிய மக்களும் அணுகும் வகையில் அவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ‘தொழில்நுட்பங்களை, ‘கருத்துருக்களின் ஆதாரமாக‘ மட்டுமே கருதக்கூடாது. தொழில்நுட்பத்தால், மனிதனின் துயரத்தைக் களைந்து, சாதாரண மனிதனின் வாழ்கையை சுமூகமானதாகவும் மாற்ற முடியும். எந்த ஒரு ஆராய்ச்சியின் இறுதி நோக்கமும் அதுதான்”, என்றும் அவர் தெரிவித்தார். பாரம்பரிய உற்பத்தி நடைமுறைகளை மாற்றும் செயல்திறன் கொண்ட முப்பரிமாண அச்சு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற திறன்மிகு தொழில்நுட்பங்களின் கலவையை உள்ளடக்கிய நான்காவது தொழில் புரட்சியின் சாதகமான பலன்களை இந்தத் திட்டம் வெளிப்படுத்துவதாக திரு நாயுடு தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்பத்தின் பலன்களைக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், கட்டுமான பணியில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம், ஒருவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலான வடிவமைப்பை வழங்குவதோடு, மனித இடையீடுகளையும் குறைப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலான வீடுகளைக் கட்டமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றவும், இது போன்ற மேலும் பல தொழில்நுட்பப் புதுமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உயர்கல்வி குறித்துப் பேசுகையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற முன்னணி நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு நம் நாட்டைத் தயார்படுத்துமாறு அவர் கோரிக்கைவிடுத்தார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முழுமையான அணுகுமுறையை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் வகுப்பறைத் திட்டங்களையும் கடந்து உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். “இதன் மூலம் அவர்கள் வேலையை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், அதனை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள்”, என்று அவர் கூறினார். நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் தொழில்நுட்ப இடையீடுகளில் கவனம் செலுத்துவதற்கான துறைகளை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் கண்டறிவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தனது அதிநவீன ஆராய்ச்சி பூங்காவின் வாயிலாக துடிப்பான புதிய நிறுவனங்களுக்கான சூழலியலை மேம்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நடவடிக்கைகளை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளையும் கடந்து வேளாண் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் இந்திய புதிய நிறுவனங்கள் தடம் பதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக வருவாய் அமைச்சர் திரு எஸ். ராமச்சந்திரன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் பாஸ்கர் ராமமூர்த்தி, பல்வேறு துறைகளின் தலைவர்கள் த்வஸ்தா மேனுஃபேக்ச்சரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.