சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான முறையில், நாட்டை மதரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கருப்புச் சட்டம் என்பதால் அந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக கேரளா, புதுவை, ராஜஸ்தான், பஞ்சாப், மே.வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதற்கு எதிராக சட்டமன்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. தமிழத்திலும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காக்கும் வகையில், தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த அதிமுக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மக்கள் திரள் போராட்டங்களும்  நடைபெற்றன. ஆனால், மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்து வந்த அப்போதைய அதிமுக அரசு மக்களின் உணர்வுகளை கிஞ்சிற்றும் மதிக்கவில்லை. மேலும், சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரிய அப்போதைய எதிர்கட்சியான திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் மூலம் அதிமுக அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 21 அன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களின் கோரிக்கையான சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆட்சியின் போது எதிர்கட்சியாக இருந்த திமுக சிஏஏவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டது; சட்டசபையிலும் அதற்கெதிராக குரலும் கொடுத்தது என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்த சூழலில் தற்போது திமுக ஆளும் கட்சியாக உள்ளதால் எவ்வித எதிர்ப்பும் இன்றி மிக எளிதாக  சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றும் என்ற மக்களின் நம்பிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 19 அன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சமூக வலைதலங்கள் வாயிலாக மாபெரும் கோரிக்கை பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கை பிரச்சாரத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலுவான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.