இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமன்ற தீர்மானத்தைப் போன்று தமிழகத்திலும் திமுக அரசு நடப்பு முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பு முதல் கூட்டத் தொடரிலேயே அந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை வைத்திருந்தது, எனினும் சபை மரபுகளை சுட்டிக்காட்டி அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு, 7 தமிழர்கள் விடுதலை மற்றும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்களையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.