NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில்
இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது… எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும் வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான். உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லியுள்ளேன் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…
இந்திய காங்கிரஸ், மாநில துணை தலைவர் இநாயதுல்லா அவர்கள் பேசியதாவது… சாதியை பற்றி சொல்லும் போது ஆண் சாதி, பெண் சாதி என்றார்கள், ஔவையார், சாதி இரண்டான் கொல் வேறில்லை என்று சொல்லியுள்ளார்கள், அவரின் மொழி தழுவி இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். முதல் மனிதன் இந்த மண்ணில் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை சொர்க்கத்தில் பிறந்த மனிதன் செய்த தவறுக்காக, படைக்கப்பட்டதே இந்த பூமி. மனிதன் வந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சாதி இம்மண்ணுக்கு வந்தது. அதனை இப்படம் அருமையாக எடுத்துகாட்டுகிறது. இது ஒரு அற்புதமான படம். மனிதனுக்கு மதம் பிடித்து போனதை, இப்படம் படம் பிடித்து காட்டுகிறது. பூமியின் முதல் மனிதன் ஜாதியின் பெயரால் செய்த தவறை மாற்ற வந்திருக்கிறான். இந்த முதல் மனிதன். நாம் ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள். மக்களின் நல்லிணத்திற்காக இப்படம் எடுத்துள்ள இப்படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறேன் நன்றி.
இயக்குநர் R.V. உதயகுமார் பேசியதாவது… இந்தப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடல் இயக்குநரே எழுதியுள்ளார் அருமையான பாடல். ஒரு அற்புதமான படத்தை தந்துள்ள இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள். இப்போது நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள். அதற்கு தேசியவிருதும் கொடுத்துவிடுகிறார்கள். இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்றதாழ்வு என்பது பணம், காசில் வருவதில்லை. புகழ்பெற்றவன் மற்றவனை இகழ்வாக நடத்துவதிலேயே அது ஆரம்பித்து விடுகிறது. அதை முதலில் மாற்றுங்கள். அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. நாம் தான் ஜாதியை கண்டுபிடித்து நாமே ஏற்றதாழ்வை பிரிவினையை உருவாக்கி, ஜாதி இல்லை என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறோம். இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் பள்ளியில் சேரும்போது, சாதியை சான்றிதழில் போடக்கூடாது என சட்டம் போடுங்கள், என்ன மதம் என்று மட்டும் போடுங்கள் பிரச்சனை தீர்ந்து விடும், இப்படத்திற்கு அனைத்து ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள் நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது… இந்த மேடையை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. ஜாதி கலவரத்தை தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விசயம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி. சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஜாதியை உயர்த்தி இன்னொரு ஜாதியை தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க கூடாது. மக்கள் ஆதரவு தராதீர்கள். இந்துவாக பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.
தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது… துணிச்சலோடு இந்தபடத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜதுரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தில் கேமரா மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் அல்ல மக்களுக்கு நல்ல பாடம். இந்தப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனக்கு தெரிந்து எங்குமே ஜாதி இல்லை, தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலை தான் இப்போது இருக்கிறது. இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயந்தாரா ஷூட்டிங் வந்தால் 7 அஸிஸ்டெண்ட், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை ஆனால் பாம்பேவில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார். இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி வந்தால் ஸ்பாட்டிலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார் அவர்கள் தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களையெல்லாம் என்ன சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்து சொல்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று தர வேண்டும், சினிமா நன்றாக இருக்கிறது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று ‘டாக்டர்’ திரைப்படம் தான். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 40 கோடி படம் 60 கோடி பட்ஜெட் ஆகி, சிவகார்த்திகேயன் அதற்கு பொறுப்பெடுத்துகொண்டார், அதற்கு யார் காராணம், திரிஷா நடித்த படத்திற்கு விழாவிற்கு வர 15 லட்சம் கேட்கிறார். வெற்றிபெற்ற பிறகு ஆடியோ பங்சனுக்கு வர மாட்டேன் என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பராவயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
நாயகி சாண்ட் ரா ரோஷ் பேசியதாவது… இது என் முதல் படம், திரையில் ரிலீஸாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இயக்குநர் கேமராமேன் மிக ஆதரவாக இருந்தார்கள். எங்கள் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.
திமுக செய்தி தொடர்பாளர் காண்ஸ்டனடைன் ரவீந்திரன் பேசியதாவது… திரையுலகம் இல்லாமல் திமுக இல்லை, திமுக இல்லாமல் திரையுலகம் இல்லை. திரையுலகை தமிழ் பேச வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. இன்றைக்கு ஒருவன் தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சொல்லிக்கொண்டு திரியும் போது, ஆதி மனிதன் மதமில்லாமல் திரிந்தானே என சொல்ல வருவகிறதே இந்தப்படம் அதுவே சந்தோஷம். முஸ்லீமும் கிறிஷ்துவமும் வேறுவேறல்ல இரண்டும் ஒரு மதமே. நீங்கள் இணையத்தில் தேடினால் உங்களுக்கே அது தெரியும், நாம் எல்லோரும் ஒன்றே என சொல்ல வந்திருக்கும் இந்தப்படம் வெற்றி பெற வேண்டும். சமூகத்திற்கான கருத்தை இந்தப்படம் சொல்கிறது. ஒவ்வொரு படத்திலும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது, எனவே எல்லாப்படமும் வெற்றி பெற வேண்டும். நன்றி
நடிகர் பாசித் பேசியதாவது… முதல் மனிதன் எனக்கும் முதம் முறையாக நடிக்கும் வாய்ப்பை தந்தது. நடிகர் மாரிமுத்து சாருடன் முதலில் நடிகும்போது, நிறைய டேக் வாங்கி நான் சரியாக நடிக்க வில்லை என திட்டி விட்டார். ஆனால் அதை எனக்கான பாடமாக எடுத்துகொண்டு, மற்ற காட்சிகளை டேக் வாங்காமல் நடித்தேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் போண்டா மணி பேசியதாவது… ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குநரின் கையில் தான் இருக்கிறது. 25 வருட உழைப்புக்கு, இந்தப்படத்தில் பலன் கிடைத்துள்ளது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை இன்று மேடையில் என்னை வாழ்த்துகிறார்கள், இயக்குநர் ராஜராஜதுரை எனக்கு வாழ்க்கை தந்துள்ளார். நடிகனை யாரும் குறை சொல்லக்கூடாது நடிகன் கேட்டால் நீங்கள் ஏன் கேரவன் தருகிறீர்கள், நீங்கள் இதைத்தான் தருவேன் என சொல்லி படமெடுங்கள். சினிமா பிழைத்திருக்கும். இந்த வெற்றி என் உழைப்புக்கு கிடைத்துள்ளது. ஒரு நடிகனுக்கு அடக்கம் இருந்தால் அவன் சினிமாவில் பிழைத்திருப்பான். இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசியதாவது… இந்தப்படம் எனக்கு ஒரு வித்தியாசமான படம் தயாரிப்பாளரிடன் ஏன் இந்தப்படம் எடுக்கிறீர்கள் எனக்கேட்ட போது, சினிமா துறை மூலம் ஒரு கருத்தை சொல்லும் போது பெரியளவில் சென்று சேர்கிறது, அதனால் எடுக்கிறேன் என்றார். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆண்டி இண்டியன் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் கதையில் இல்லை. இப்படத்தில் நாயகி மிக நன்றாக நடித்திருக்கிறார். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.
திரு விஜயமுரளி பேசியதாவது… படத்தோட நாயகனுக்கு டூயட் இல்லை என்பதால் தான் அமைதியாக அடக்கமாக இருக்கிறார். ஆனால் நன்றாக நடித்துள்ளார். முதல் படம் எடுக்க வருகிறவர்களின் புகலிடமாக தாஜ்நூர் தான் இருக்கிறார். யாராயிருந்தாலும் அருமையான இசையை தருகிறார். தயாரிப்பாளர் உசேன், ஆடியோ பங்சனில் சிரித்து கொண்டிருக்கும் ஒரே தயாரிப்பாளர் இவர் தான். படம் வெற்றி பெற்று அவருக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி…