சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வெடிக்கடையில் நேற்று மாலை நடந்த தீ விபத்தும், அதைத் தொடர்ந்த உயிர்ப்பலிகளும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஆறு பேரில், பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை முடித்து விட்டு, எதிரே வெடிக்கடைக்கு அருகிலுள்ள டீ கடைக்கு டீ குடிக்கச் சென்ற ஷா ஆலம், சையத் காலித், நாசர், பஷீர் ஆகிய நான்கு பேர் ஷஹீதாகி இருக்கிறார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). இவர்களில் மூன்று பேர் திருமணமாகாத இளைஞர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாசாமி என்பவர் மற்றும் ஒரு பெண்மணி பலியாகி உள்ளனர். மேலும் பத்து பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். பலியானோர் குடும்பத்தினரின் வேதனையும், துயரமும் வார்த்தைகளால் துடைக்க இயலாது. மக்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த கோர நிகழ்வை சாதாரண தீ விபத்தாக கருதி கடந்து செல்லமுடியாது. இதிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகளை மக்களும், அரசாங்கமும் உணரவேண்டும். பண்டிகைகள் என்பது பிறர் நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும். பிறர் நலனில் அக்கறை இல்லாவிட்டாலும், பிறருக்கு துன்பம் தராமலாவது இருக்க வேண்டும். அபாரமான அறிவு வளர்ச்சிப் பெற்ற இன்றைய தலைமுறையினர் நன்கு சிந்தித்து உயிருக்கும், உடலுறுப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வகைகளை புறந்தள்ள வேண்டும். அருகருகே கேஸ் பயன்பாடு உள்ள பேக்கரி, டீ கடை போன்ற கடைகளுக்கு நடுவே வெடிக்கடை நடத்த எப்படி யாரால் உரிமம் வழங்கப்பட்டது? அரசின் பாதுகாப்பு குறைபாடே இந்த சோக நிகழ்வுக்கு காரணம், விபத்து நடந்த வெடிக்கடையில் தடை செய்யப்பட்ட வெடிவகைகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். சென்னைப் போன்ற பெருநகரங்களில் பாதுகாப்பு கருதி இது போன்ற உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தீவுத்திடல் போன்ற இடத்தில் வெடிக்கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி பட்டாசு விற்பனைச் சந்தை ஏற்படுத்தி தந்தது போல அரசு ஏன் ஊரகப் பகுதிகளில் கவனம் செலுத்தவில்லை? இதை தமிழக முதல்வர் உணரவேண்டும். நகர்ப்புறம், ஊரக பகுதி என தமிழகம் முழுவதும், பொதுமக்கள் அனைவரும் நடமாடும் கடைத் தெருக்களில் பட்டாசு விற்பனையை உடனே தடை செய்ய வேண்டும். ஒதுக்குப்புறமான இடத்தில் உரிய பாதுகாப்புடன் அதற்குரிய தற்காலிக விற்பனைச் சந்தையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். சாதாரண விபத்துக்கு அறிவிப்பது போல, இதில் உயிரிழந்தோருக்கு ஐந்து லட்சம், காயமடைந்தோருக்கு ஒரு லட்சம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பொருந்தாது. பொதுமக்கள் பாதுகாப்பு மீதான அரசின் கவனக்குறைவே சங்கராபுரம் சம்பவத்திற்கு காரணம். எனவே குறைந்தபட்சம் உயிரிழந்தோருக்கு பத்து லட்சமும், காயத்தின் தன்மைக்கேற்ப ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்காகவும், அவர்களை பலி கொடுத்துவிட்டு சொல்லொணா துயரத்தில் மூழ்கி இருக்கும் அவர்கள் குடும்பத்தார்களின் பொறுமை மற்றும் ஆறுதலுக்காகவும், காயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவோர் விரைவில் பூரண நலம் பெறவும் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)