தமிழர்களின் வரலாற்றைக்கூறும் படம் “தங்கலான்”

-ஷாஜஹான்-

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்ஜித் இயக்கத்தில் சியான் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தங்கலான்” . 1850 ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டம் வேம்பூர் கிராமத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள், அடிமைப்பட்டுக்கிடந்த வரலாற்றை இயக்குநர் பா.ரஞ்ஜித் நம் கண் முன்னே படம்பிடித்துக் காட்டியுள்ளார். சோழ மன்னன், தாழ்த்தப்பட்ட இனமான விவசாயப் பெருமக்களின் விளை நிலங்களை அந்தணர்களுக்கு தானமாக வழங்கினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அந்த நிலங்களை அதிகார வர்க்கம் இன்றும் ஆக்கிரமத்து அனுபவித்து வருகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆங்காங்கே சுட்டிக்காட்ட தயங்கவில்லை. ப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனமாக வாழும் விவசாயி விக்ரம். ஆங்கிலேயனிடம் தஙகத்தை தேடும் கூலிகளாக தனது இனத்தாருடன் வேலை செய்கிறார். தங்கம் கிடைத்ததா? மிராசுதாரிடமிருந்து தங்களது விலை நிலங்களை மீட்டாரா? என்பதுதான் கதை. விக்ரம் இப்படத்திற்காக தனது வாழ்நாள் உழைப்பை எல்லாம் ஒன்று திரட்டி கொட்டிக் கொடுத்து விட்டார். அவ்வளவு அருமையான உடல் நடிப்பு. தாழ்த்த்ப்பட்டவர் கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி நெற்றி நிறைய் நாமம் போட்டு பெருமாளை வணங்கும் காட்சியும் வசனமும் திரையரஙுகு முழுவதும் சிரிப்பலை வீசுகிறது. மேல்சட்டை அணியாமல் முந்தானையால் மார்பகத்தை மறைத்துக் கொள்ளும் பார்வதியும், அவரின் இனப் பெண்களும், மேல் சட்டை அணிந்து கொள்ளும் காட்சியில் அவர்களின் கொண்டாடத்தை காண கண் கோடி வேண்டும். அற்புதமான திரைக்கதை. முழமையான தமிழ் பாட்டும் தமிழரின் இசையும் தந்த ஜி.வி.பிரகாஷ் போற்றதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர். படத்தில் தொய்வு விழும் காட்சியை எல்லாம் தன் இசையால் தோள் கொடுத்து தூக்குகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். படத்தை கூர்ந்து பார்த்தால்தான் நடிப்பது இன்னார் என்று தெரியும் அளவுக்கு அரிதாரப்பூச்சும் அடவு கட்டுதலும் அமைத்த ஒப்பனையாளர் பாராட்டுக்குரியவர். பல விருதுகளை நோக்கி செல்கிறது ரஞ்சித்தின் “தங்கலான்”.