புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் ‘கம்பெனி’. கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள். அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் கதை. உண்மை சம்பவத்தை மையமாக இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ் பாடிபில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளையும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளாராம். அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு ரசிக்கும்படியும் வந்திருக்கிறதாம். படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவரான அறிமுக நடிகர் தெரிஷ் குமார், சண்டைக்காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் ரியலாக நடித்தாராம். ஒரு சண்டைக்காட்சியில் மிக உயரமான இடத்தில் இருந்து தெரிஷ் குமார் கீழே விழுவதுபோன்ற காட்சியை படமாக்க முடிவு செய்த படக்குழு, அந்த காட்சியை டூப் போட்டு எடுக்க முடிவு செய்ய, நடிகர் தெரிஷ் குமாரோ, டூப் வேண்டாம், நானே நடிக்கிறேன், என்று கூறி ரியலாக குதித்தாராம். ஆனால், எதிர்பாரத விதமாக அவர் பாதுகாப்பு வளைத்தை தாண்டி விழுந்ததால், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிறகு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தெரிஷ் குமார், அதேபோல் ரியலாக சண்டைக்காட்சிகளில் நடிக்க, அவரை பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் மிரண்டு போய் விட்டாராம். சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி நடிப்பிலும் படக்குழுவினரை மிரள வைத்திருக்கும் தெரிஷ் குமாரின் நடிப்பை பார்க்கும் போது, அவருக்கு இது தான் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார், என்று ஒட்டு மொத்த படக்குழுவே அவரை பாராட்டுகிறது. தெரிஷ் குமாருடன் மற்ற மூன்று பேரும் அவர் அவர் கதாப்பாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கராத்தே வெங்கடேஷ், ரமா, சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில்
நடித்திருக்கிறார்கள்.படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் தங்கராஜு நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். எம்.ஜி.பஞ்சாட்சரம் இணை தயாரிப்பு பணியை
கவனிக்கிறார். கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்கங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மக்கள் தொடர்பு: தர்மதுரை