வெட்டவெளியில் நடந்த தெருக்கூத்தை வெள்ளித்திரையில் காணவைத்த பெருமை “ஜமா”

அழிந்துபோன தமிழரின் தெருக்கூத்து நாடகத்தை வெள்ளித் திரையில் காணவைத்த இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகனை பாராட்டி அகமகிழ வேண்டும். முற்காலத்தில் பொழுதுபோக்குக்காக இருந்தது தெருக்கூத்து, பாவைக்கூத்து ஆகிய இரண்டும்தான். இந்த நவீனகால கலையுலகத்தில் மறைந்தொழிந்துபோன நம் முன்னோர்கள் கண்டு மகிழ்ந்த தெருக்கூத்து நாடகத்தை வெள்ளித்திரையில் “ஜமா” என்ற படத்தின் மூலம் கண்டுகளிக்கலாம்.
திருவண்ணாமலையில் சேத்தன் தலைமையில் நடத்தும் மகாபாரதம் கதையில் பெண் வேடத்தில் பாரி இளவழகன் நடித்து வருகிறார். பெண் வேடம் போட்டதால் நிஜவாழ்விலும் பெண்ணின் நளினங்கள் வந்துவிடுகிறது. ஆதலால் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார். அவருக்கு பெண் கொடுக்கவும் மறுக்கிறார்கள். பெண் வேடம் போடும் பாரி இளவழகனுக்கு அர்ஜுனன் வேடம் போட வேண்டும் என்ற ஆசை சிறுவயதுமுதலே இருந்திருக்கிறது. அவரது ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே கதை. பாரி இளவழகனின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. சேத்தன் வில்லத்தனத்தில் அசத்துகிறார். அம்மு அபிராமி கண்களாலேயே பேசுகிறார். இளையராஜாவின் இசை மெய்மறக்கச் செய்கிறது. கிராமத்தின் அழகை திரையில் கண்குளிர பார்க்கவைத்த ஒளிப்பதிவாளர் பாராடுதலுக்குறியவர். படத்தில் நடித்த பலர் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் சிறப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. தமிழக அரசின் வரிவிலக்கு பெற வேண்டிய படம். ஆனால் ஜி.எஸ்.டி வரி இருப்பதால் இந்த கூத்துக்கலைக்கும் வரிவிலக்கு கிடைக்காமல் போய்விட்டது.