தமிழ்ப் பள்ளிகளை வாழவைப்பீர்* *அதுவே இன்றைய தேவை

*நெகிரியிலே* உள்ளதமிழ்ப் பள்ளிகளுள்

       *பதின்மூன்று* நிலைப்ப  தற்கே

எகிறியெகிறி முயன்றாலும் எள்ளளவும்

       வழியில்லை ; ஏனென் றாலோ,

பகிருதற்கோ, பகர்வதற்கோ கூசுதையோ ;

     மாணவர்கள் படிப்ப தற்கே

வகிடெடுத்த வாக்கைப்போல் வரிசையிலோ

      தனிப்பட்டோ வராத தாலே !

*பதின்மூன்று* தமிழ்ப்பள்ளி ஆயுளதும்

      நீடிக்கப் பள்ளி சுற்றி

வதிகின்ற இந்தியர்கள் அவர்களுளும்

      தமிழர்களே, வரிந்து கட்டிக்

குதிக்காதீர் ; பொறுமையுடன் *எழுவயதுப்*

      பிள்ளைகளைக் கூட்டிச் சென்று

*பதிந்திடுங்கள் தமிழ்ப்பள்ளி நிலைத்திடவே*

      என்றின்று பணிவாய்ச் சொன்னேன் !

தமிழ்வாழத் தமிழ்ப்பள்ளி தனில்பிள்ளை

     தமைச்சேர்க்கத் தாழ்மை யோடு

தமிழனவன் சொன்னாலே *தமிழா,நீ*

     *கேட்பதில்லை ;* “சரிதான் போஎன்(று)

இமியளவும் வெட்கமின்றி இயம்புகிறான்

     என்தமிழன் ! என்றா லும்தான்

தமிழனல்ல ; *சீனரவர் சான்கீகின்*

    சொன்னதையும் *தவிர்க்கா தேடா !*

மூடுகிற நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளி

      நெகிரியிலே மொத்த மில்லை ;

நாடுமுழு தும்சொன்னால் *முந்நூற்றைத்*

     *தாண்டுமென்றே* நவில்கின் றார்கள் !

*ஏடு,முதல் தமிழேடாய்* இந்தியர்தம்

        பிள்ளைகளும் எடுத்தே விட்டால்

பீடுபெறும் தமிழ்மொழியும் ; பள்ளிக்கும்

       *பேருபெத்த பேரும் சேரும் !*

மாணவர்கள் குறைவதனால் மூடுகிற

      படியிருக்கும் வண்ணப் பள்ளி

ஆனவற்றின் *மேலாளர் வாரியங்கள்*

      எத்தனையோ அனைத்தும் கூடி

மாணவரை *அதிகரிக்க ; அல்லவெனில்*

      *பள்ளியிடம் மாற்றம் காண*

ஆனமட்டும் பாடுபட்டுப் பள்ளிகளை

      வாழவைப்பீர் ; *அதுவே தேவை !*

                                                         *பாதாசன்*