தமிழ்ப்பள்ளி யில்படிக்கப் பிள்ளைகளைக் காணோம் !
தவறிதுவும் சிறிதென்று நினைக்கின்றார் பெற்றோர் !
*தமிழ்ப்பள்ளி ஆசிரியர்* பெரும்பாலோர் தாங்கள்
தவம்செய்யா மல்பெற்ற பிள்ளைகளை முற்றாய்த்
தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பாமல் தவறுசெய்கின் றாரே !
*தமிழ்த்தலைவர் பிள்ளைபலர்* பல்லாண்டாய் எந்தத்
தமிழ்ப்பள்ளி யிலும்கற்கச் செல்லவில்லை ; கேட்டால்
தலைபோகும் தவறிதுவா ? *சிறுதவறே* என்பார் !
*ஊடகத்துத்* தமிழ்கூட இலக்கணங்கள் *மீறும் !*
உணருங்கள் எனிலவரும் *சிறுதவறே* என்பார் !
பாடகர்கள் சிலபேர்கள் *உச்சரிப்போ* மோசம் ;
பாருங்கள் எனிலதுவும் *சிறுதவறே* என்பார் !
நாடகத்தில் நடிப்பெல்லாம் மிகநன்றாம் ; ஆனால்,
நல்லதமிழ் உச்சரிப்போ நச்சரிப்பாய்த் தோன்றும் !
கேடதனால் தமிழுக்கு விளைந்திடுமே என்றால்
கெட்டதுபோ ! *சிறுதவறே* அதற்கென்ன ? என்பார் !
எழுத்தாளர் – கவிஞர்களின் தமிழ்ப்பிழையைச் சுட்டின்
*இவர்நக்கீ ரன்பேரன்* அவனாஎன் றெரிவார் !
எழுத்தாளர், கவிஞரென வருவதற்கு முன்பே
எளியதமிழ் இலக்கணங்கள் அறிந்திடணும் என்னில்
எழுத்துகளாம் *இருநூற்று நாற்பத்தே(ழு)* அனைத்தும்
எழுதிடவே தெரிந்தாலே போதாதா ? கேட்பார் !
எழுத்துகளைத் தெரிந்தெழுதத் திறன்பெற்றோர் யாரும்
எழுத்தாளர் எனிலதுவும் *சிறுதவறே* என்பார் !
*இந்தியர்க்கே* என்றிருக்கும் *வானவில்லும்* தமிழை
எந்தெந்த வகையிலெலாம் *குறைத்திடவே* திட்டம்
சந்ததமும் போட்டபடி *தமிழ்அழிவைச்* செய்யும் !
தமிழ்அழிப்பைச் *சாதனையாய்* வானவில்லும் சொல்லும் !
எந்தவிதம் சுட்டிடினும் கொட்டிடினும் தாங்கள்
எண்ணுவதும் தமிழ்மறைப்பைப் பண்ணுவதும் தானே
சிந்தனையில் வானவில்லார் கொண்டிருக்கும் *கொள்கை !*
சீறியிதைக் கேட்டாலோ *சிறுதவறே* என்பார் !
*சிறுதவறு, சிறுதவறு, சிறுதவறே* என்று
சிறுசிறிதாய்த் *தமிழ்அழிப்பைக் ;குறைப்பைச்* செய்யின்
*பெருந்தவறாய்* ஓர்நாளில் அதுமாறும் ; மாறும் !
பேரழிவும் தமிழுக்கே *பின்னாளில் நேரும் !*
சிறுதுளியும் பெருவெள்ளம் ஆகிடுதல் போன்று
*சிற்றெறும்பு* நாளெல்லாம் *பெருங்கல்லில்* ஊர்ந்தால்
பெருங்கல்லும் *தேய்ந்துவிடும்* என்பதனைப் போலப்
*பெருந்தமிழும்* சிற்றெரும்பு *தவறூரத் தேயும் !*
*பாதாசன்*