நிழல்படக் கலைஞர் *மலையாண்டி*
நெடுநாள் *நாளிதழ்த்* துறையினிலே
உழைத்து வருபவர் என்றாலும்
உலகம் என்றும் தனைமதிக்கும்
வழக்கந் தன்னை உருவாக்கும்
வகையில் *ஆதி குமணன்* நூல்
வழங்கி உள்ளார் *மலையாண்டி !*
வாழ்க அவர்தம் தமிழ்த்தொண்டு !
பெரிதாய்க் கல்வி பெறவில்லை !
உரிய செல்வம் சேர்க்கவில்லை !
குறியாம் அவருக் கின்றுவரை
குதூகலத் தோடு படப்பிடிப்பாம் !
பெரிய பெரிய தலைவர்களை ;
பிரமுகர், எளியோர் பலரைத்தன்
கருவிப் படத்துள் சிறைவைத்துக்
காலமெல்லாம் காப்பவராம் !
தள்ளத் தள்ளத் தாவிவரும்
தன்றன் செல்லப் பூனையென
எல்லார் மனமும் கொஞ்சிவரும்
எங்கள் *மலையாண் டி*; நண்பர்
*வள்ளல் ரெனா* வின் வரலாற்றை ;
வளர்த்த *என்.டி.எஸ்* கதையைக்
கொள்ளை விருப்பத் துடன்முயன்று
தொகுத்தார் ; கொடுத்தார் தமிழர்க்கே !
அந்த வரிசை நூல்களிலே
*ஆதி குமணன்* புகழ்கூறும்
இந்த நூலும் ஒன்றாகும் !
இன்னும் ஒருநூல் உண்டெனிலோ
அந்த நூலும் *சுப்ரா டான்*
*சிறி* யார் கதையைச் சொல்நூலாம் !
அச்சில் *சுப்ரா* வரலாறும்
அழகாய் அமையும் நிலையினிலே
மெச்சத் தகுந்த *ஆதிமகன்*
மேன்மைக் *குமண பூபதியின்*
உச்ச மான வரலாற்றை
உயர்ந்த முறையில் *பதிப்பிட்டே*
உச்சம் தொட்டார் *மலையாண்டி*
*உண்மைத் தொண்டர் வரலாற்றில் !*
*பாதாசன்*