வாக்களிக்கப் போகின்ற இந்தி யர்காள் !
*மனசாட்சி* பேசுகிறேன் கேட்பீ ராக !
வாக்குக்காய் *இருபெருங்கூட் டணிகள்* இன்று
வகைபலவாய் வாக்குறுதி அளிக்கின் றார்கள் !
ஆக்கங்கள் அதிகமுண்டு நாங்கள் ஆட்சி
அமைத்திட்டால் அதனாலே உறுதி யாக
வாக்களிப்பீர் எங்களுக்கே ; அல்லா விட்டால்
வருங்கேடு ; பெருங்கேடு எனச்சொல் கின்றார் !
பதினைந்து தேர்தல்களைப் பார்த்து விட்டோம் !
பதினைந்தாம் தேர்தலிலே மிஞ்சி நின்ற
அதில் *ஆறு மாநிலங்கள்* சட்ட மன்றத்
தேர்தலுமே அவசியமாய் நடக்கும் வேளை
அதில்வாக்கைப் போடுதற்கே காத்தி ருக்கும்
*அனைத்திந்தி யர்களெலாம்* கேட்டி டுங்கள் !
பதைபதைப்பே கொள்ளாமல் நிதானத் தோடு
பலமுறை *யோ சித்துவிட்டு* வாக்க ளிப்பீர் !
பரம்பரையாய் மலேசியத்தில் வாழு கின்ற
பல்லினத்தார்க் கிடையிலென்றும் வேற்று மைகள்
துரும்பளவும் இருந்ததிலை ;:ஆனா லும்தான்
*ஒருதுக்கம்* நடந்ததனைத் தவிர கண்டீர் !
குறும்பாகச் சிலர்தந்த இடருக் குப்பின்
குடும்பம்போல் கொள்கையொடு வாழு கின்ற
சிறப்பிதனைப் பொறுக்கமுடி யாத வர்கள்
சீழ்மனத்தோர் *இனம் – மதத்தை* இழுக்கின் றார் ; ஏன் !
தேர்தலிலே இனம்– மதத்தைத் தூண்டி விட்டால்
தேன்கூடும் நச்சுக்கூ டாக மாறும் !
ஊர்– இதனை ஒருமுறைகண் டதுவே போதும் !
உணர்ந்திடுவீர் ; தெளிந்திடுவீர் ; தெளிந்த பின்பும்
யார்பேச்சில் நன்மையுண்டு ! *இனம தத்தை*
இழிவுசெய்வார் கைக்குள்ளே ஆட்சி போனால்
தூர்ந்துவிடும் மக்களிடம் ஒற்று மையே ;
தொடங்கிவிடும் இனம்–மதத்துப் பிரிவி னைகள் !
ஆதலினால் ஒற்றுமையை முன்னி றுத்தி
அதில்மதத்தை இனத்தையுமே ஒதுக்கி வைத்து
*வேதம் அதே* ஒற்றுமைதான் மலேசி யர்க்கே
வெற்றுச்சொல் இதுவல்ல எனநி னைத்தே
ஓதுங்கள் ஒற்றுமையை இந்தி யர்காள் ;
ஓதியதன் படிநடக்க உறுதி கொண்டு
வாதின்றிப் போடுங்கள் உங்கள் வாக்கை ;
மாற்றுங்கள் இந்தியரின் வரலாற் றையே !
*பாதாசன்*