*”தங்களுக்கு மட்டும்தான் உரித்தாம் எங்கள்*
*தாய்நாடாம் மலேசியா* மற்றோர்க் கெல்லாம்
எங்கிருந்தோ வந்திங்கே தங்கும் நாடாம்;
இவர்களெலாம் *வந்தேறி* என்னும் கொள்கை
தங்களுடைய தாகும்” என்று சொல்லு கின்ற
தன்னலத்தார் *பெரிக்காத்தான் நேசன லாராம்*
இங்கிருக்கும் *தேசியக்கூட் டணியார்* என்றே
எல்லார்க்கும் தெரிந்திருக்கும் உண்மை கண்டீர் !
*பெரிக்காத்தான் நேசனலார்* கொள்கைக் கேற்பப்
பிழைக்கவந்தோர் *இந்தியர்கள் – சீன மக்கள்*
இருபிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில்
இருந்தும்,*வாக் குரிமைதனைப்* பெற்றும் கூட
தெருப்பிச்சை எடுத்திடவும் தக்கார் அல்லர் ;
தெரிந்திடுக மலாயர்களே எனமு ழங்கி
விருப்புற்றே *இனபேதம் ; மதத்தின் பேதம்*
விதைத்திடும்தீச் செயல்களையே செய்கின் றாரே !
இந்தவெறி கொண்டிருக்கும் அன்னார் கொள்கை
இதுதெரிந்தும் *கண்ணிருந்தும் குருட ராகி*
அந்த *முறை யற்றவழி* செல்வா ருக்கே
ஆதரவைத் தேர்தலிலே தந்தோ ருள்ளே
இந்தியர்கள் ஆதரவோ *இருபத் தோரு*
*விழுக்காடாம்* எனும்சேதி கேட்ட போதே
எந்தவிதம் அரசியலில் *இந்தி யர்கள்*
*இளித்தவா யர்களென்றே* உள்ளார் காண்க !
*வந்தேறி இந்தியர்கள்* என்பார் வீட்டு
வாசலிலே பிச்சைக்கு நின்று வாக்கு
தந்துமந்த வீட்டாரை ஆத ரிக்கச்
சத்தியம்செய் திடத்துணியும் தமிழர் தம்மை
அந்தோ *துத் தேறிகளே* என்றே தூற்ற
அவமானப் படுகிறதே நல்ல நாக்கும் !
வந்தேறி எனச்சொல்லு வார்க்கே *வாக்கை*
வழங்கிடுவோர் *கொம்பேறி மூக்கன்* போல்வார் !
*பாதாசன்*