தொலைவிருந்தே நிலவைநாம் இதுகாறும் பார்த்தோம் !
தொடமுடியா விட்டாலும் தொட்டதுபோன் றுணர்வைத்
தொலைவிருந்தே மக்களுக்கும் ஊட்டிய *இந் தியர்கள்*
தொலைக்காட்சி வழிஉலகோர் கண்டிடவே செய்தார் !
மலை *இமயத்* தினைவென்று கொடியேற்றி னோம்,கேள் !
வானத்தில் *மூன்றுஇலட்சம் எண்பத்தி னான்கா*
*யிரம்* கி.மீ.தொலைவுக்குச் *சந்திரயான் 3* சென்ற
இடமாம் *தென் துருவநிலா* தொடவைத்தார் தமிழர் !
*சீனாவுக்(கு)* அடுத்தபடி மக்கள்தொகை கொண்ட
சீர்மேவும் *இந்தியத்தின்* மக்கள்கண்ட பெருமை !
சீனாவும், அமெரிக்கா, ரஷ்யாவும் காணாச்
சிறப்பினையே இந்தியரும் கொண்டதுவும் அருமை !
ஆனானப் பட்டவரால் தென்துருவ நிலவின்
அடிமண்ணைத் தொடமுடியா நிலைதன்னைத் தகர்த்து
தேனான இன்பத்தைக் குடித்ததுபோல் உணர்வைத்
தென்றமிழர் இந்தியர்க்கே தந்துள்ளார் அடடா…!
சந்திரயான் 3-அதனின் சாதனையில் மொத்த
இந்தியர்க்கும் பங்குண்டாம் ; என்றாலும் பங்கில்
இந்தியருள் தமிழர்க்கே பங்குகொஞ்சம் கூட !
இதைஉலகத் தமிழர்களுள் ஒருவன்நான் என்னும்
*சந்ததியின் – மரபணுவின்* தொடர்பதனால் சொன்னேன் !
தமிழர்களின் அறிவியலின் தொன்மைவர லாற்றைச்
சந்ததமும் நினைப்பவர்க்கே தமிழர்களின் ஆற்றல்
சந்திரயான் வெற்றியதில் உள்ளதெனத் தெரியும் !
*வானையளப் போம்,கடலின் மீனையளப் போமே*
*வானிலுள்ள சந்திரமண் டலத்தியல றிவோமே*
வானளவு பாட்டுரைத்த *பாரதியார்* வரியை
வரலாறாய் எழுதியதே *சந்திரயான் 3-உம் !*
தேனைப்போல் பேசுகிற தமிழர்களும் உண்டு ;
செயல்களினால் சாதிக்கும் தமிழர்களும் உண்டு ;
வானிலவின் தென்துருவம் ஆராயும் *நுண்மை*
*மயில்சாமி, வீரமுத்து வேல்,வனிதா* தன்மை !
வாழியவே *சந்திரயான் 3* திட்ட வல்லார் !
வாழியவே சாதனையில் சம்பந்தப் பட்டோர் !
வாழியவே ஆசியக்கண் டத்தில்வாழ் மக்கள் !
வாழியவே அனைத்துலக இந்தியர்கள் எல்லாம் !
வாழியவே சந்திராயன் 3-வெற்றிக் கான
மாபெரிய திட்டத்தை வரைந்தளித்த தமிழர் !
வாழியவே இந்தியத்தில் வாழ்தமிழ மக்காள் !
வாழியவே உலகளவில் வாழ்கின்ற தமிழர் !
வாழியவே வாழ்த்தியநம் பிரதமரும் நன்றே !
வாழியவே *சந்திரயான் 3-இன்பலன் பெறுவோர் !*
*பாதாசன்*