தமிழ்மங்கை சூடியுள்ள* *தனிரோஜா சை.பீர் ஆவார்

அன்றொருநாள் *தமிழ்நேசன்* ஞாயிற்றுப் பதிப்பில்

    அழகாக வெளிவந்த சிறுகதைகள் ஒன்றுக்(கு)

என்றுமிலா அதிசயமாய்ப் படம்வரைந்த பெருமை

    இன்றுள்ள பாதாசன் என்பவனுக் குண்டே !

அன்றுவந்த படத்தோடு சிறுகதையை எழுதி

      அசத்தியவர் இன்றைய *பீர் முகமதுவே ;* அந்தத்

தொன்றுமிக்க வரலாற்றை இன்றுநினைத் தேன் ; நான்

       தொடரவிலை படவரைவை ; *சை.பீரோ* தொடர்ந்தார் !

ஓவியத்தை நான்தொடர விலையெனினும் அந்நாள்

       உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கவிமூலம் தொடர்ந்தேன் !

பாவியத்தை நான்தொட்டேன் ; *சை.பீரோ*  தொடர்ந்து

      பலபுதுமைச் சிறுகதைகள் எழுதிஇந்த மண்ணில்

தூவிவிட்ட விதைகளினால் விளைந்தசில எழுத்துத்

      துளிர்களெலாம் எழுத்தாளர் ஆகிடவே செய்தார் !

ஆவிஎழுத் தையெழுதும் எழுத்தாள ருள்ளே

       *அசல்தங்கம், முத்து,வைரம்* அவர்படைப்பே , உண்மை !

ஆவலுடன் எதற்காக இவற்றையெலாம் சொன்னேன் ?

      அவர், *பதினோ ராம்உலகத் தமிழாய்மா நாட்டில்*

தாவிவந்து அணைக்கின்ற *தமிழ்ச்சேயாய்ப்* பரிசு

     தமைவந்து தழுவியதே *நோபல்பரி சைப்போல் !*

கூவிஇதைத் தமிழ்கூறும் உலகமெலாம் முரசு

      கொட்டுங்கள் சை.பீரின் சிறப்பிதனைப் பாடி !

ஏவுகிறேன் ஈங்குள்ள கவிஞரெலாம் கூடி

     எழுதுங்கள் மலையளவு கவிதைளை என்றே !

தமிழகத்தில் மட்டுமல்ல ; தமிழ்கூறும் உலகத்

      தமிழர்களின் உறவைஎங்கும் வளர்த்துவரும் தூதர் !

தமிழகத்தார் பலர்,பரிசுபாராட்டைத் தந்தே

    தாலாட்டும் மலேசியத்தின் எழுத்தார் இவரே !

தமிழ்தந்த பேச்சாளர், நெடுங்கதைகள், மேலும்

     தனிக்கட்டு ரைகளுடன் *பெண்குதிரை* ஏறிச்

தமிழுலகைச் சுற்றியவர் என் *என்பால்ய நண்பர் !*

      தமிழ்மங்கை சூடியுள்ள *தனிரோஜா ; உம்ம !*

                                                             *பாதாசன்*