*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?*

சேலைகட்டும் வழக்கமெலாம் *இந்தி யப்பெண்*

     *சிருங்காரத் திற்கல்ல !* இதுதெ ரிந்தும்

மாலைக்கண் கொண்டவர்கள் இப்ப டித்தான்

     மனம்குறுகி நினைக்கின்றார் போலும்! சேச்செ

சேலைகட்டல் இந்தியர்க்கே பண்பா டாகும் !

       சேதியிதைத் தெரியாமல் புரியா மல்தான்

சேலைகட்டக் கூடாதேஎன்று புத்தி

       தெளிவின்றி ஒருவரின்று சொல்லி யுள்ளார் !

இந்தியர்தம் மாணவிகள் சுதந்தி ரத்தின்

      இனியதொரு நாளன்று சேலை கட்டி

வந்திருக்க லாகாதே என்றே கூறி

      வருத்தத்தை இந்தியமா ணவிக்கே தந்து

நொந்துவிடச் செய்திருக்கும் அந்தப் பள்ளி

      ஒழுங்குநட வடிக்கையதன் குழுத்த லைவர்

எந்தவொரு சட்டத்தின் கீழ்சொன் னாரோ ?

     யாரறிவார் ? அஃதவர்க்கே வெளிச்சம் ஆகும் !?

இப்போது நடக்கின்ற ஆட்சி என்ன ?

      இனவாத , மதவாத ஆட்சி அல்ல ;

எப்போதும் நாட்டுமக்கள் ஒற்று மையாய்

      இருந்திடவே வேண்டுமென வலியு றுத்தித்

தப்பேதும் அதில்நடக்கக் கூடடா தென்று

      சாற்றுகிற *ஒற்றுமையின் ஆட்சி* தானே !

எப்படித்தான் இதுதெரிந்தும் ஒற்று மையை

       இழிவுசெய்வோர் பள்ளியிலே இருக்கின் றாரோ ?

சீனயின மாணவர்கள் *அந்நி கழ்வில்*

      *சியாங்சாம்,ஹன் ஃபூ* ஆடை அணியும் போது

சீனரைப்போல் இந்தியப்பெண் அந்நி கழ்வில்

       *சேலைகட்டக் கூடாதே* என்று சொல்லி

ஆனமட்டும் இந்தியரை நோக வைக்கும்

       அடாதசெயல் என்பதையே அறியா மூடர் ;

ஊனமுற்ற அறிவுள்ளோர் என்று கூற

   உதடசையும் என்றாலும் மெளனம் காக்கும் !

                                                                *பாதாசன்*