உலகளவில் புத்தாக்க முயற்சி மூலம்
ஒருநொடிக்குள் அறிவியல்சார் தொழில்கள் நாளும்
நலம்பெறவே தொழில்நுட்பம் வளர்ச்சி காணும்
நற்செய்தி களைக்கேட்டுப் பாரில் மாந்தர்
குலவுபெரு மகிழ்ச்சியிலே திளைக்கும் போது
கூறுகிறார் “மலேசியத்தில் நாற்பத் தைந்தே
இலட்சம்பேர் *செயற்கைநுண் ணறிவால்* வேலை
இழந்திடுவார் ஐந்தாண்டு களுக்குள்” என்றே !
மனிதர்சிலர் அறிவாற்றல் திறத்தி னாலே
மனிதர்பலர் வேலைபறி போகும் சேதி
இனிப்பல்ல ; கசப்பாக இருக்கும் என்றே
எத்தனையோ பேர்சொல்ல அன்று கேட்டோம் !
எனினுமஃதே உண்மையல்ல என்ப தைநாம்
இன்றுவரை அறிந்துவரச் செய்கின் றோமே !
*கணினி* வந்த காலத்தில் பலரின் வேலை
காலியென்றார் ! அப்படியா நடந்த(து) அன்று ?
எனக்கெனவோ இன்றுவந்த *ஏ.ஐ* என்னும்
*ஆர்ட்டிஃபிசல் இண்டெலிஜண்ட்* தொழில்நுட் பத்தால்
கணக்கற்ற தொழிலாளர் வேலை கள்தாம்
காணாமல் போய்விடுமே என்ப தெல்லாம்
மெனக்கட்டுச் சிலர்சொல்லல் பொய்தான் என்றே
மேலோட்ட மாய்அல்ல ஆழ்ம னத்தின்
கணக்கென்றே படுகிறது ! அவர்கள் பொய்யில்
கையளவே மெய்யிருப்பின் கவலை வேண்டாம் !
சரஞ்சரமாய் தொழில்நுட்பம் பலவந் தாலும்
தனிமனித அறிவாற்றல் அவற்றுக் கான
தரமான தீர்வுகளைக் காணும் போது
ததிங்கிணத்தோம் வந்திடுமா வேலைக் கிங்கே ?
வரம்வாங்கி வந்ததுபோல் மனிதக் கூட்டம்
மாறுதலுக் கேற்றமறு மாற்றம் காண
சிரமூளை எத்தனையோ வழிகள் காட்டிச்
சிரமத்தைத் தீர்க்கையிலே நமக்கேன் அச்சம் !
அப்படியே ஒருவேளை வேலை போனால்
அரசாங்கம் இன்றுமுதல் திட்டம் போட்டுத்
தப்பேதும் நிகழாமல் தொழிலா ளர்க்கே
தகுவேலை கிடைப்பதற்கு வழியைச் செய்யின்
எப்போதும் இவ்வாறு வேலை போனால்
எதிர்விளைவைத் தீர்த்திடவே ஆகா தாமோ ?
இப்படித்தான் எதையும்தீர்த் திடணும் என்னும்
இயல்பறிவை அரசுகொளின் இன்னல் ஏது ?
*பாதாசன்*