நாட்டு மக்கள் தொகையினிலே
நம்முடை *இலக்கம்* குறைந்திடினும்
பூட்டுப் போட்ட சிறைக்கதவுள்
புண்பட் டிருக்கும் இந்தியரைக்
காட்டும் இலக்கம் விழுக்காட்டில்
கனத்த அதிர்ச்சி கொடுப்பதனைக்
கேட்டே நெஞ்சம் குமுறுதையா ;
கிடுகி டுத்தே நடுங்குதையா !
சிறையுள் இருக்கும் இந்தியருள்
செந்தமிழ் இனமே அதிகமெனும்
உரையைக் கேட்டே நம்குருதி
உறைதல் போன்ற உணர்வுளதே !
குறையா தா,இவ் வெண்ணிக்கை
கூடிய விரைவில் என்றிருந்தால்
நிறைந்து வழியும் நீரெனவே
நித்தம் செய்தி வருகுதையோ !
என்ன காரணத் தாலிவர்கள்
இங்கே சிறையில் நிறைகின்றார் ?
சின்ன கேள்வி தான்,இதற்கோ
*செம,செம* என்றே சொல்லியென்றும்
கன்னம் நனைய வழிந்தோடும்
கண்ணீர்க் கதைகள் பலவென்றே
*அண்ணா துரை,சிறை இயக்குநராம்*
அவர் *தனி ஒருவன்…* நூல்சொல்லும் !
எல்லாத் துன்பக் கதைகளையும்
எழுதி *அண்ணா* நமக்கிங்கே
அல்வா போலக் கசப்பினையே
அளிக்க அவரும் முனைந்ததனைச்
சொல்லி மகிழ வார்த்தையிலை !
சொல்லைக் கேட்டுத் திருந்துதற்கே
இல்லை கைதிகள் என்பதுதான்
இதயம் தாங்காச் செய்தியதாம் !
சூடம் அணையும் முன்பேயே
தொட்டுக் கும்பிட் டால்தானே
தேடும் பயனும் கிடைக்குமென்பர் !
தெரிந்தும் சூடம் அணைந்தபினர்
நாடும் பலனும் கைதியர்க்கே
நன்றாய் ; நிறைவாய்க் கிடைத்திடுமோ ?
வீடே சிறைதான் எனக்னருதி
வீணா கிடுவோர் சிந்திப்பீர் !
பொதுவில் சிறையுள் கைதியெலாம்
புதிய – தெளிந்த மறுவாழ்வை
அதிவி ரைவாய்ப் பெற்றிடவே
ஆசைப் பட்(டு) அண் ணாதுரையார்
புதிய நூலை எழுதியுள்ளார்
பொருத்த மான நேரத்தில் !
அதனைப் படித்தே *கைதிகளும்*
அடுத்த நொடியே திருந்திடட்டும் !
*பாதாசன்*