மலேசியத்தின் இந்தியர்கள்* *வழிப்போக்கர் அல்லவெனில் யார்; யார் ?

இந்நாட்டின் இந்தியர்கள் *வழிப்போக்கர்* என்றே

      யாரேனும் கருதாதீர் ; அதுபெரிய தப்பே !

எந்நாட்டில் வாழ்ந்தாலும்  இந்தியர்கள் தங்கள்

       பொன்னாடே அதுவென்று கருதுவதைக் காண்பீர் !

தன்னாடே என்றெண்ணி அதனுயர்வுக் காகத்

       தன்னுடலை வருத்தியுழைத் திந்நாட்டை வளர்ச்சிக்(கு)

இன்னமுமே உழைக்கின்ற முன்னோடி என்றால்

     என்றுமிதை மறுத்திடவோர் ஆளிங்கே இல்லை !

*என்கடனே பணிசெய்து கிடப்ப* தென்றே அந்நாள்

       நன்றுரைத்த *திருநாவுக் கரசவர்* இரத்தம்

மின்னெனவே பாய்ந்தோடும் உடலுற்ற தமிழர்

      மேலதிக மாய்வாழு கின்றதனால் கேளீர் ;

அன்றிருந்தே உடலுழைப்பை இந்நாட்டுக் காக

     அளித்துவிட்டுக் *கம்* மென்று கிடப்பதனால் யாரும்

இந்நாட்டில் வழிப்போக்கர் இந்தியர்கள் என்றே

        எள்ளளவும் எண்ணாதீர் ; எண்ணிடிலோ இழுக்காம் !

இதைநன்றே உணர்ந்திருந்தும் இம்மண்ணின் மைந்தர்

       என்றுரைப்போ ருள்பலரே இந்தியரும் தங்கள்

கதைவாழ்வில் முக்கியமாய்ப் பங்கெடுப்போர் என்னும்

      கருத்தினையே ஒப்பாமல்  சதிராட்டம் போட்டுச்

சிதைக்கின்றார் மலேசியத்தின் ஒற்றுமையின் வேரை !

       சீர்மிகுந்த அரசியலில் இந்தியர்தம் பங்காம்

அதைக்கூட தரமறுத்தே அவர்செய்யும் நன்றி

       அதையுந்தான் மறந்துவிடத் துணிந்துவிட்டார் ! ஐயோ !

அறுபத்தா றாண்டுகளாய் இந்தியர்கள் குருதி

    அதையட்டை உறிஞ்சிடவே பால்தோட்டக் காட்டில்

வறுமையிலே உழன்றாலும் இந்நாட்டை நல்ல

       வளர்ச்சிக்கு வித்திட்ட வரலாற்றைப் பல்லோர்

மறந்ததனால் – *அரசியலில், பொருளியலில், கல்வி*

       வளர்ச்சியிலே தளர்ச்சியினை இன்றுவரை கண்டே

வறண்டுள்ள கிணறாக்கி விட்டார்கள் ; கிணற்றில்

       வந்திடுமே அரசியலால் புத்தூற்றாம், உண்மை !

இதன்மூலம் மலேசியர்கள் அனைவருக்கும் சொல்வோம் ;

        *இந்தியர்கள் இந்நாட்டில் வழிப்போக்கர் அல்லர் ;*

*முதல்மூல தனமாக மலேசியத்திற் கென்றும்*

        முன்னேற்றம் தருகின்ற *திருமகளாய்க்* காண்பீர் !

முதலிடத்தில் எதிலுமின்றி மலேசியத்தின் *வளர்ச்சி;*

       *முன்னேற்றம்* இவற்றுக்காய் என்றென்று மாக

*முதலாக இருப்பதுடன் இந்தியர்கள்;* நாட்டை

       முன்காக்கும் *படைவீரர்* என்பாரும் ஆவார் !

                                                                    *பாதாசன்*